20 பேரை பலி கொண்ட ஆம்னி பஸ் தீ விபத்துக்கு 234 'மொபைல் போன்'களின் பேட்டரி காரணம்?
20 பேரை பலி கொண்ட ஆம்னி பஸ் தீ விபத்துக்கு 234 'மொபைல் போன்'களின் பேட்டரி காரணம்?
ADDED : அக் 25, 2025 11:55 PM

ஹைதராபாத்: 'ஆந்திராவில், 20 பேரை பலி கொண்ட ஆம்னி பஸ் தீ விபத்தின் போது, பஸ்சில் இருந்த, 234 'மொபைல் போன்'களின் பேட்டரிகள் வெடித்து சிதறியதும், தீ வேகமாக பரவ காரணமாக அமைந்திருக்கலாம்' என, சந்தேகம் எழுந்துள்ளது.
தெலுங்கா னாவின் ஹைதராபாதில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு நோக்கி, நான்கு குழந்தைகள் உட்பட 44 பயணியருடன் கடந்த 23ம் தேதி இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தின் சின்னதேகுரு பகுதிக்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதி காலை, 2:45 மணியளவி ல் சென்றபோது பைக் மோ தி விபத்துக்குள்ளானது .
இதில் சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்ட பைக், பஸ்சின் அடியில் சென்று டீசல் டேங்கில் மோதியது.
இதில், பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், பஸ்சில் இருந்த, 19 பயணியர் மற்றும் பைக் மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் என மொத்தம், 20 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து உயர்மட்ட க்குழு விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவிட்ட நிலையில், பஸ்சில் ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எரிய, 234 'மொபைல் போன்'கள் அடங்கிய பார்சலும் காரணமாக இருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
தீக்கிரையான பஸ்சில், ஹைதராபாதைச் சேர்ந்த வியாபாரி மங்காநாத் என்பவர், 46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 234 மொபைல் போன்கள் அடங்கிய பார்சலை, பெங்களூரில் உள்ள, 'இ - காமர்ஸ்' எனப்படும், இணைய வழி வணிக நிறுவனமான, 'பிளிப்கார்ட்'டுக்கு அனுப்பி உள்ளார்.
இதற்கிடையே அந்த பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டதும், மொபைல் போன்களின் பேட்டரிகளும் வெடித்ததால், தீ வேகமாக பரவும் சூழலை அதிகரிக்க செய்ததாக மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆந்திர தீயணைப்புத் துறையின் டைரக்டர் ஜெனரல் வெங்கட்ராமன் கூறுகையில், “பஸ்சின் முன்பக்கத்தில் ஏற்பட்ட டீசல் கசிவு தான் தீ விபத்து ஏற்பட முதன்மையான காரணமாக இருக்கும் என நினைக்கிறோம். ஆனால், பஸ்சில் வைக்கப்பட்ட பார்சலில், 234 மொபைல் போன்கள் இருந்தன.
''அவற்றின் பேட்டரிகள் வெடித்து, தீயின் வேகத்தை அதிகரிக்க செய்திருக்கக்கூடும். இதுதவிர பஸ்சின் வடிவமைப்பும் இரும்புக்கு பதிலாக, அலுமினியத்தில் இருந்தது. இதனால், தீ எளிதில் பரவ காரணமாக அமைந்திருக்கலாம்,” என்றார்.
பைக் விபத்திற்கு
குடிபோதை காரணமா?
இதற்கிடையே, ஆம்னி பஸ் மீது பைக் மோதி விபத்தை ஏற்படுத்திய சிவசங்கர், விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் தன் நண்பருடன் அங்குள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இந்த வீடியோ பதிவில், பெட்ரோல் பங்க்கில் யாரும் இல்லாததால், தன் பைக்கை தனியாக எடுத்துச் சென்றார். அப்போது, அவர் நிதானமற்ற சூழலில் பைக்கை ஓட்டிச்சென்றது தெரியவந்தது. இதனால், அவர் குடிபோதையில் இருந்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கரின் நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

