சபரிமலையில் மாயமான தங்கம் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதா? தீவிரமாக விசாரிக்கிறது சி.பி.ஐ.,
சபரிமலையில் மாயமான தங்கம் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதா? தீவிரமாக விசாரிக்கிறது சி.பி.ஐ.,
ADDED : ஜன 04, 2026 02:21 AM
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாயமான தங்கம், ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை துாதரகம் மூலம் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டிருக்கலாம் என, சி.பி.ஐ., சந்தேகிக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில், 2019ல் புனரமைப்பு பணிகள் நடந்தன. கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
வழக்குப்பதிவு தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும்போது, துவார பாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கோ விலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை உட்பட தென் மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் இருந்து திருடப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் ஒரு கும்பல் கேரளாவில் செயல்பட்டு வருவதாகக் கூறும் ஆதாரங்கள் வெளிவந்தன.
முன்னதாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை துாதரகத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல்களில் சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதற்கு அத்துாதரகத்தின் முன்னாள் ஊழியர்களான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பி.எஸ்.சரித் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
விசாரணை இதன்படி, சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சி.பி.ஐ.,க்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் துாதரக ஊழியர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கிஉள்ளனர்.
இவர்களுடன், அமலாக்கத்துறை, சுங்கத்தடுப்புப் பிரிவின் பொருளாதார குற்றப்புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறுதியான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொள்ளும் என, தெரிய வந்துள்ளது.

