'ஏர் இந்தியா' விமான விபத்துக்கு பைலட் காரணமா?: அமெரிக்க ஊடக செய்திக்கு கண்டனம்
'ஏர் இந்தியா' விமான விபத்துக்கு பைலட் காரணமா?: அமெரிக்க ஊடக செய்திக்கு கண்டனம்
ADDED : ஜூலை 18, 2025 01:44 AM

புதுடில்லி: 'ஆமதாபாத், 'ஏர் இந்தியா' விமான விபத்துக்கு, இன்ஜினுக்கான எரிபொருளை விமானி ஒருவர் துண்டித்ததை, காக்பிட் உரையாடல் உறுதிபடுத்துகிறது' என, அமெரிக்க ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய விமானிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடந்த மாதம் 12ம் தேதி புறப்பட்ட, 'ஏர் இந்தியா போயிங் 787 -- 8 ட்ரீம்லைனர்' விமானம் விழுந்து நொறுங்கியது.
இது தொடர்பாக விசாரித்த ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணைக் குழு கடந்த 12ம் தேதி மத்திய அரசிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. விமானத்தின் எரிபொருள் வினியோகம் துண்டிக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என அதில் கூறப்பட்டது.
விமானிகளுக்கான, 'காக்பிட்' அறையில், இரு விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல் விபரங்களையும் அறிக்கையில் வெளியிட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல நாளிதழான, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', இரு விமானிகளுக்கு இடையிலான உரையாடலை மேற்கோள் காட்டி, செய்தி அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.
அதன் விபரம்:
காக்பிட் அறையில் இரு விமானிகள் பேசுவது குறித்து விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில், விமானம் புறப்பட்ட சில வினாடிகளுக்கு பின், விமானத்தின் முதல் அதிகாரி, அனுபவம் வாய்ந்த கேப்டனிடம், 'ஏன் எரிபொருள் சுவிட்சுகளை 'கட்ஆப்' நிலைக்கு மாற்றினீர்கள்' என கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு கேப்டன், 'நான் அவ்வாறு செய்யவில்லை' என, பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல், விபத்துக்கான முக்கிய காரணமாக மனித தவறே இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இருப்பினும், எரிபொருள் சுவிட்ச் கட் ஆப் ஆனது எப்படி என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் சுமீத் சபர்வால், 15,638 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவமும், முதல் அதிகாரி கிளைவ் குந்தர், 3,403 மணிநேர அனுபவமும் கொண்ட நிலையில், இந்த விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.