ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருந்ததா ? ஏ.எஸ்.ஐ.க்கு கோர்ட் நோட்டீஸ்
ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருந்ததா ? ஏ.எஸ்.ஐ.க்கு கோர்ட் நோட்டீஸ்
UPDATED : நவ 28, 2024 12:03 AM
ADDED : நவ 27, 2024 11:57 PM

புதுடில்லி: ராஜஸ்தானில் பிரசித்தி பெற்ற ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆஜ்மீர் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜ்மீர் தர்கா என்பது பிரசித்தி பெற்ற சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்களின் அடக்கத்தலம் (மக்பரா) ஆகும். இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இங்கு சிவன் கோயில் இருப்பதாகவும் அந்த இடத்தை ஆய்வு செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பரில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் 1911-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்விலாஸ் ஷர்தா என்பவர் எழுதிய புத்தகத்தில் புலந்த் தர்வாசா உட்பட அஜ்மீர் தர்காவைச் சுற்றி இந்து சிற்பங்கள் மற்றும் உருவப்படங்கள் தெரியும் என மேற்கோள் காட்டப்பட்டது.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி இந்திய தொல்லியல்துறை , ஆஜ்மீர் தர்கா கமிட்டி ,சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிச. 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.