துங்கபத்ரா ஆற்றில் நீர் திறப்பு பொது மக்களுக்கு எச்சரிக்கை
துங்கபத்ரா ஆற்றில் நீர் திறப்பு பொது மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : பிப் 02, 2024 10:56 PM
ஷிவமொகா: பிப்ரவரி 5 முதல் 10 வரை, பத்ரா அணையில் இருந்து துங்கபத்ரா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், எச்சரிக்கையாக இருக்கும்படி, உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக நீர்ப்பாசன கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கை:
விஜயநகரா, ஹூவின ஹடகலியின், மைலாரா கிராமத்தில் உள்ள, மைலார லிங்கேஸ்வர சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்னிகோற்சவா நடப்பது வழக்கம். அது போன்று இம்முறையும் உற்சவம் நடக்க உள்ளது.
எனவே, ஷிவமொகாவின், பத்ரா அணையில் இருந்து, துங்கபத்ரா ஆற்றுக்கு நாளை மறுநாள் இரவு 10:00 முதல் 10ம் தேதி இரவு 10:00 மணி வரை, தினமும் 2,000 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விடப்படுகிறது.
தண்ணீர் திறப்பதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். கிராமத்தினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆற்றங்கரையில் நடமாட வேண்டாம்.
ஆடு, மாடுகளை மேய விட கூடாது. சிறு பிள்ளைகளை ஆற்றங்கரை அருகில், விளையாட விட வேண்டாம்.
துங்கபத்ரா ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது, பொது மக்கள், விவசாயிகள் சட்ட விரோதமாக பம்ப் செட் பொருத்தி தண்ணீரை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பத்ரா அணை நீர்ப்பாசன பகுதியில், லட்சக்கணக்கான விவசாய நிலம் உள்ளது. இம்முறை மழை சரியாக பெய்யாததால், பத்ரா அணை நிரம்பவில்லை.
அடுத்த மழைக்காலம் வரும் வரை, அணையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழை துவங்குவது தாமதமானால், குடிநீருக்கு கஷ்டமாகிவிடும். இருக்கும் தண்ணீரை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

