பெங்களூரில் குடிநீர் கட்டணம் உயர்வு? அறிக்கை சமர்ப்பிக்க சிவகுமார் உத்தரவு!
பெங்களூரில் குடிநீர் கட்டணம் உயர்வு? அறிக்கை சமர்ப்பிக்க சிவகுமார் உத்தரவு!
ADDED : ஜன 29, 2025 09:03 AM
பெங்களூரு: பெங்களூரில் குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு நகரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாநகராட்சி, பெங்களூரு வளர்ச்சி ஆணையம், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் துணை முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கடந்த 2014 முதல் தற்போது வரை 11 ஆண்டுகளாக, பெங்களூரு நகரில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால், ஆண்டுக்கு பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு 1,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது.
வாரியம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் முன்பு 35 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 75 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிற சேவைகள் மற்றும் மனிதவள செலவுகள் உட்பட மாதத்திற்கு 85 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
வங்கிகள் மறுப்பு
குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை, நாங்கள் எதிர்கொள்கிறோம். இதற்காக நகரின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நீர் ஆதாரத்தை விரிவுபடுத்த, பல வங்கிகளிடம் கடன் வாங்க முடிவு செய்தோம்.
ஆனால், குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் நஷ்டத்தில் இருப்பதால் எங்களால் உதவ முடியாது என்று வங்கிகள் கூறிவிட்டன. இதனால் குடிநீர் கட்டண உயர்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஏழைகளாக இருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும் தண்ணீர் இணைப்பு பெற சிறிய தொகையை செலுத்த வேண்டும். சட்ட விரோத குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்தியோர் அவற்றை சட்டபூர்வமாக வேண்டும். பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மீண்டு வருவதற்கும், அனைவருக்கும் தண்ணீர் வழங்குவதற்கும் ஒரு திடமான முடிவை எடுப்பது அவசியம்.
கோடை காலத்தில் பெங்களூரில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம். நிலத்தடி நீரை அதிகரிக்க, ஏரியை நிரப்ப வேண்டியிருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
20,000 இணைப்பு
காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்டத்தின் கீழ், இதுவரை 15,000 புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 20,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீடு மற்றும் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று தண்ணீர் இணைப்புகளை பெறும்படி மக்களுக்கு கோரிக்கை வைக்கும்படி அதிகாரிகளுக்கு நாம் அறிவுறுத்தி உள்ளேன்.
குடிநீர் கட்டண உயர்வு குறித்து, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஏழைகளால் அதிக கட்டணம் கொடுக்க முடியாவிட்டால் குறைந்தபட்சம் லிட்டருக்கு ஒரு பைசா கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை.
எங்கள் அரசு வந்த பின், மின்சார கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. சுரங்கப்பாதை சாலை கட்டுமானத்திற்காக பிப்ரவரியில் 17,780 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டருக்கு அழைக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மூன்றரை ஆண்டுகளுக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். மாநகராட்சி நிதியும் வழங்கப்படும். திட்டத்திற்கு ஹட்கோ உள்ளிட்ட பல வங்கிகள் கடன் வழங்க முன் வந்துள்ளன. குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடமிருந்து கடன் வாங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.