கோடை வருமுன்பே வெப்பத்தின் தாக்கம் பெங்களூரில் தர்பூசணி விற்பனை அதிகரிப்பு
கோடை வருமுன்பே வெப்பத்தின் தாக்கம் பெங்களூரில் தர்பூசணி விற்பனை அதிகரிப்பு
ADDED : ஜன 29, 2024 10:56 PM

பெங்களூரு: பெங்களூரில் கோடைகாலத்துக்கு முன்பே, வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாகிறது. சூட்டை தணிக்க பலரும் தர்பூசணி ஜூஸ் அருந்துகின்றனர். இதனால் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.
பொதுவாக பெங்களூரில், பிப்ரவரி இறுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம். ஆனால் இம்முறை கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால், வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் துவங்கும் முன்பே, வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. அதிகாலை குளிர் இருந்தாலும், மதிய நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கோடைகால அனுபவத்தை அளிக்கிறது.
வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், உடலின் உஷ்ணத்தை தணிக்கவும் பலரும் தர்பூசணி ஜூஸ் அருந்துகின்றனர்; பழத்தை சாப்பிடுகின்றனர். தர்பூசணியில் வைட்டமின் 'ஏ' மற்றும் 'சி' ஏராளமாக உள்ளன. விலையும் குறைவு என்பதால் தர்பூசணியை விரும்புகின்றனர்.
மடிவாளா, கோரமங்களா, மல்லேஸ்வரம், சிவாஜிநகர், கே.ஆர்., மார்க்கெட் உட்பட பெங்களூரின் பல்வேறு இடங்களில் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து, பெங்களூரின் மார்க்கெட்களுக்கு பழங்கள் வருகின்றன. கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை உள்ளது. அளவு, ருசி அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
சாலை ஓரங்களில் தள்ளு வண்டிகளில், தர்பூசணி விற்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது தினமும் ஐந்து முதல் எட்டு குவிண்டால் பழங்கள் விற்பனையாகின்றன. கோடைகாலம் துவங்கிய பின், விற்பனை அதிகரிக்கும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.
இப்போது மார்க்கெட்டுகளில், ஹனிமிலன், மது மதியர், சுப்ரீத், சரஸ்வதி, எல்லோ மிலன், கிரண், ஐஸ் பாக்ஸ், நாமதாரி உட்பட, பல்வேறு வகையான பழங்கள் விற்பனையாகின்றன.