வயநாடு தொகுதி இடைத்தேர்தல்; களம் இறங்கியது காங்கிரஸ்
வயநாடு தொகுதி இடைத்தேர்தல்; களம் இறங்கியது காங்கிரஸ்
ADDED : அக் 16, 2024 07:37 PM

வயநாடு: கேரளாவில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பணிகளில் மற்ற கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலியை தேர்வு செய்ததன் மூலம், வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, பாலக்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷபி பரம்பில் மற்றும் செலக்காரா தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., கே. ராதாகிருஷ்ணன் ஆகியோரும், லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதன் காரணமாக, காலியான வயநாடு லோக்சபா தொகுதிக்கும், பாலக்காடு மற்றும் செலக்காரா சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினர், பிரசாரத்தை தொடங்கி விட்டனர். வயநாடு தொகுதியில் பிரியங்காவின் போட்டோ அடங்கிய போஸ்டர்களையும், பேனர்களையும் ஒட்டி ஓட்டு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.
ஆனால், மற்ற கட்சிகளான பா.ஜ., மற்றும் இடதுசாரி கூட்டணிகள் இன்னும் வேட்பாளரை தேடும் பணியிலேயே இருந்து வருகிறது. பா.ஜ., சார்பில் ஷோபா சுரேந்திரனும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் எம்.எல்.ஏ., பிஜிமோலையும் நிறுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், பா.ஜ.,வின் ஷோபா சுரேந்திரன், பாலக்காடு சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, அக்.,17ம் தேதி இடதுசாரி கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வேட்பாளரை அறிவிக்க இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இ.ஜே., பாபு தெரிவித்துள்ளார். அதேபோல, 17 மற்றும் 18ம் தேதிகளில் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி வேட்பாளரை தேர்வு செய்ய இருப்பதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.