வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா: கேரள காங்கிரஸில் நெருக்கடி
வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா: கேரள காங்கிரஸில் நெருக்கடி
ADDED : செப் 25, 2025 04:12 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரிய அரசியல் நெருக்கடியாக, வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.டி.அப்பச்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக அப்பச்சன் இருந்தார். இந்த நிலையில்,வயநாடு காங்கிரஸ் முன்னாள் டி.சி.சி பொருளாளர் என்.எம். விஜயன் மற்றும் முள்ளன்கொல்லி பஞ்சாயத்து உறுப்பினர் ஜோஸ் நெல்லெடம் ஆகியோரின் தற்கொலைகள் உட்பட காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சை இருந்தது. மேலும் காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்த நிலையில் வயநாடு எம்பி பிரியங்கா, வயநாடு வந்தபோது, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து தனது கடுமையான எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
பிரியங்காவின் சமீபத்திய பயணத்தின் போது மாவட்டத் தலைமைக்கும் எம்.பி.க்கும் இடையிலான உரசல் குறிப்பாகத் தெரிந்தது. அவரது பல பொது நிகழ்வுகளில் அப்பச்சன் பங்கேற்கவில்லை.
இது மேலும் ஊகங்களுக்கும் சர்ச்சைக்கும் வழிவகுத்தது. அவர் இல்லாதது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, கேபிசிசி கூட்டத்தில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்தில் இருப்பதாக அப்பச்சன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.