UPDATED : ஆக 01, 2024 06:34 PM
ADDED : ஆக 01, 2024 12:24 AM

வயநாடு: கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று இரவு 293 ஆக உயர்ந்தது. தோண்ட தோண்ட சடலங்கள் வெளி வருவதால், மீட்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மண்ணில் மறைந்த வீடுகளில் வசித்த 225 பேரின் நிலைமை தெரியாததால், குடும்பத்தினர் பீதியில் உறைந்துள்ளனர். மேலும், வயநாட்டில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், மீட்புப் பணியையும் விட்டு விட்டே மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மழை கொட்டியது. இதனால், நிலச்சரிவுகள் ஏற்பட்டு, கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல கட்டடங்கள் மண்ணில் புதைத்தன.
தற்காலிக பாலங்கள்
ராணுவம், விமானப்படை, கடற்படையுடன், தேசிய பேரிடர் மீட்புப்படை உடனடியாக விரைந்தன. நேற்று முன்தினம் காலையில் துவங்கிய மீட்புப் பணியில், பலர் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொத்து கொத்தாக சடலங்கள் மீட்கப்பட்டன.
இருபது மணி நேரம் நடந்த மீட்புப் பணி நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டு, நேற்று காலை மீண்டும் துவங்கியது. கட்டட இடிபாடுகள், மணல் குவியல்களுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்தன.
இது ஒரு பக்கம் இருக்க, பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர். இதையடுத்து, தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. , 293 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதில், 89 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் 143 உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 32 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மக்கள் பரிதவிப்பு
பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக பலியாகி உள்ளதால், உடல்களை வாங்குவதற்கு கூட யாரும் இல்லாத கொடூர நிலை உருவாகியுள்ளது. அதுபோல, தாய், தந்தை இறந்தது அல்லது காணாமல் போனதால், பல குழந்தைகளின் உடல்களை, அவர்கள் படித்து வந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
உறவுகளை தேடி மருத்துவமனைக்கு செல்வதா, சவக்கிடங்குக்கு செல்வதா என்று மக்கள் பரிதவிப்பது நெஞ்சை பிளப்பதாக உள்ளது.
இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தின் பல இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் கண்காணிப்பு
மருத்துவமனைகளில், 191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்கப்பட்ட 3,069 பேர், வயநாட்டில் அமைக்கப்பட்டுள்ள 45 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை கிராமத்தில் இரண்டு தனியார் சொகுசு விடுதிகளில் இருந்த சுற்றுலா பயணியரை, ராணுவத்தினர் போராடி மீட்டனர்.
அங்கிருந்த 'எலா ரிசார்ட்' மற்றும் 'வனராணி' சொகுசு விடுதிகளில், சிக்கி தவித்த 19 பேரை ராணுவத்தின் 15 பேர் அடங்கிய குழு, பாய்ந்தோடும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் மீட்டனர். ரிசார்ட்டுகளில் இருந்தவர்களை கயிறுகள் வாயிலாகவும், ராணுவ வீரர்கள் கைகோர்த்து மனித சங்கிலி ஏற்படுத்தியும் மீட்டனர்.
ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் என, 1,200க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பணிகள் குறித்து ராணுவ தளபதி உபேந்திர திவேதியிடம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரித்தார்.
மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கண்காணித்து வருவதாக உள்துறை இணையமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக 145 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. தற்போது கேரள அரசிடம், 394 கோடி மத்திய நிதி உள்ளது என்றும் கூறினார்.