'ப்ளீஸ் சார், காப்பாத்துங்க'... நிலச்சரிவு ஏற்பட்டவுடன் வந்த முதல் செல்போன் அழைப்பு!
'ப்ளீஸ் சார், காப்பாத்துங்க'... நிலச்சரிவு ஏற்பட்டவுடன் வந்த முதல் செல்போன் அழைப்பு!
ADDED : ஆக 05, 2024 09:41 AM

கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, உதவி கேட்டு பெண் ஒருவர் விடுத்த செல்போன் அழைப்பின் ஆடியோ வைரலாகி வருகிறது.
385 பேர் பலி
கடந்த 30ம் தேதி வயநாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் சிக்கி சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அங்கிருந்த குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டதால், அங்கு வசித்து வந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. இதுவரையில் 385 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி 7வது நாளாக நீடித்து வருகிறது.
முதல் அழைப்பு
இந்த நிலையில், வயநாட்டில் முதல் நிலச்சரிவு ஏற்பட்ட போது, உதவி கேட்டு தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் நீத்து ஜோஜோ என்பவர் அழைப்பு விடுத்த செல்போன் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ப்ளீஸ் சார்...
மேப்பாடி மலைப்பகுதியைச் சேர்ந்த அவர், தான் பணியாற்றும் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, தனது கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதோடு, தனது வீட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து விட்டதாகவும், தான் அருகே உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 6 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டதாகவும் கூறி, தயவு செய்து உடனடியாக உதவிக்கு ஆட்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைக் கேட்டு பதறிப் போன மருத்துவமனை நிர்வாகமும், ஆம்புலன்ஸுடன் மீட்பு குழுவினரை அனுப்பி வைத்தது. ஆனால், சூரல்மலையை இணைக்கும் பாலம் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால், அவருக்கு உடனடியாக உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2வது நிலச்சரிவு
இது தொடர்பாக நீத்து ஜோஜோ பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவர் ஷானவாஸ் பல்லியால் கூறுகையில், 'நிலச்சரிவு ஏற்பட்டவுடன் நீத்து ஜோஜோ தான் முதலில் அழைத்தார். மிகவும் பதற்றத்துடன் பேசினார். அவருக்கு உதவுவதற்காக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸுடன் மீட்பு குழுவினரை அனுப்பி வைத்தோம். தொடர்ந்து செல்போனில் தொடர்பில் இருந்த அவரை, 2வது நிலச்சரிவுக்குப் பிறகு எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை,' எனக் கூறினார்.
இதனிடையே, நீத்து ஜோஜோவின் செல்போன் ஆடியோ ரெக்கார்டு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.