கல்வியை நவீனப்படுத்துகிறோம் பிரதமர் மோடி பெருமிதம்
கல்வியை நவீனப்படுத்துகிறோம் பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : ஏப் 30, 2025 06:52 AM

புதுடில்லி: மத்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் வாத்வானி அறக்கட்டளை ஆகியவை இணைந்து, புதுமை கண்டுபிடிப்புகள் தொடர்பாக அரசு, கல்வி, தொழில்துறை மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில், 'யுகம்' என்ற பெயரிலான மாநாட்டை டில்லியில் நேற்று நடத்தின.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த யுகம் என்பதற்கு சமஸ்கிருதத்தில் சங்கமம் என்று பொருள். அரசு நிறுவனங்கள் மற்றும் வாத்வானி அறக்கட்டளையும் இணைந்து, 1,400 கோடி ரூபாய் கூட்டு முதலீட்டில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
புதுமை கண்டுபிடிப்புகள் பயணத்தில் இது முக்கிய பங்கு வகிக்கும். அடுத்த, 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, எதிர்கால தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம்.
செயற்கை நுண்ணறிவு, உயிரி அறிவியல், உயிரி தொழில்நுட்பம் என, பல துறைகளிலும், பல ஆராய்ச்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
புதிய ஆராய்ச்சிகளில், நம் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
உண்மையான வாழ்க்கை என்பது சேவையிலும், சுயநலம் இல்லாமல் இருப்பதிலும் உள்ளது என, சமஸ்கிருதத்தில் கூறப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பமும், சேவைக்கான ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும்.
இளைஞர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்துவதில், கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. 21ம் நுாற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
சர்வதேச தரத்தை மனதில் வைத்து, புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. அது, நம் நாட்டின் கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

