பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தணுமா; ஒரே ஒரு நிபந்தனை இருக்கிறது என்கிறார் ராஜ்நாத்
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தணுமா; ஒரே ஒரு நிபந்தனை இருக்கிறது என்கிறார் ராஜ்நாத்
ADDED : செப் 22, 2024 05:07 PM

காஷ்மீர்: தீவிரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுடன் எப்படி நல்லுறவை கடைபிடிக்க முடியும் என்று ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேர்தல்
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வரும் 25ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், அக்., 1ல் மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த தேர்தலில், பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும், காங்., - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுவதால், மும்முனை போட்டி நிலவுகிறது.
பிரசாரம்
2வது கட்ட தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் பிரதமர் மோடி ஓட்டு சேகரித்து சென்ற நிலையில், இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நிம்மதியான வாழ்க்கை
பூச் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அதே சமயம், இந்தியாவின் சீரிய நடவடிக்கையால், ஜம்மு காஷ்மீர் புதிய உருமாற்றத்தை பெற்றிருப்பது அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நாம் காங்கிரஸைப் போல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை ஒதுக்கி வைக்க மாட்டோம். அவர்கள் விரும்பினால், அந்த மக்களை நம்முடன் இணைத்து வாழத் தயார். இதன்மூலம், அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும்.
பேச்சுவார்த்தைக்கு தயார்
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதே எங்களின் கொள்கையாகும். பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவையே விரும்புறோம். ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் போது, நல்லுறவை எப்படி எதிர்பார்க்க முடியும். இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதி கொடுத்தால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், எனக் கூறினார்.