இந்த காலத்தில் அதெல்லாம் பார்க்க முடியாது; ரஷ்யா உறவு குறித்த கேள்விக்கு ஜெய்சங்கர் பதில்
இந்த காலத்தில் அதெல்லாம் பார்க்க முடியாது; ரஷ்யா உறவு குறித்த கேள்விக்கு ஜெய்சங்கர் பதில்
ADDED : நவ 13, 2024 11:57 PM

புதுடில்லி: ''ரஷ்யாவுடன் நாங்கள் நட்புறவு வைத்தால், ஆஸ்திரேலியா கோபப்படும் என்பதை ஏற்க முடியாது. இந்த காலத்தில் அதையெல்லாம் பார்க்க முடியாது,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள 'டிவி சேனல்' ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி, தற்போது ஒளிபரப்பாகியுள்ளது. அந்தப் பேட்டியில், ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. நாங்கள் ரஷ்யாவுடன் நட்புறவுடன் உள்ளோம்.
இதற்கு ஆஸ்திரேலியா கோபப்படும் என்பதை எல்லாம் இந்த காலத்தில் பார்க்க முடியாது. தற்போது நட்புறவு என்பது தனிப்பட்ட அம்சம் கிடையாது.
உதாரணத்துக்கு, எங்கள் அண்டை நாடான பாகிஸ்தானுடன் பல நாடுகள் நட்புறவு வைத்துள்ளன. அதற்காக நாங்கள் எவ்வளவு கோபப்பட வேண்டும். பல நாடுகள் தடை விதித்திருந்தபோதும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினோம்.
எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்தாலும், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு, சிக்கல் ஏற்பட்டிருக்கும்.
இது உலக நாடுகள் பலவற்றிலும், விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருக்கும். எங்களுடைய நடவடிக்கையால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவுடன் நல்ல நட்பு உள்ளதால்தான், போரைத் தவிர்த்து, பேச்சில் ஈடுபடும்படி எங்களால் கூற முடிகிறது. அதற்கு உதவவும் தயாராக உள்ளோம் என்று கூற முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.