ADDED : மார் 19, 2025 06:24 PM

பிரகதி விஹார்:“முந்தைய ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் வடிகால்களில் வண்டல் மண் அகற்றும் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் அரசு, பூஜ்யத்தில் இருந்து தொடங்கி, பணிகளை முடிக்க வேண்டியுள்ளது,” என, முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தெற்கு டில்லியில் உள்ள சுனேஹ்ரி புல் வடிகாலில் நேற்று துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, முதல்வர் ரேகா குப்தா, பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆய்வு மேற்கொண்டனர்.
வடிகால்கள் அனைத்தும் அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு துார்வாரப்பட்டு வருகின்றன.
மழைக்காலத்தில் நகரில் வெள்ளம் தேங்குவதைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புதிய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
ஆய்வுக்குப் பின் முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் வடிகால்களில் வண்டல் மண் அகற்றும் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் அரசு, பூஜ்யத்தில் இருந்து தொடங்கி, பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.
தேசிய தலைநகரில் உள்ள அனைத்து வடிகால்களிலும் வண்டல் மண் அகற்றப்படுவதை பா.ஜ., அரசு உறுதி செய்யும். மழைக்காலத்தில் வெள்ளம் தேங்குவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்.
குடிநீர் விநியோகிக்கும் வலை அமைப்பு முற்றிலும் சிதைந்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு டேங்கர்களில் தண்ணீர் விநியோகிக்கும் நிலை உள்ளது. குழாய்களில் தண்ணீர் விநியோகிக்கும் வலையமைப்பு உருவாக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.,வின் இரட்டை இயந்திர அரசுகள், நகருக்குத் தேவையான அனைத்தையும் செய்து முடிப்பதில் உறுதியாக உள்ளது. இதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, எம்.பி., பன்சூரி ஸ்வராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.