சரணடைகிறோம்! மாநில முதல்வர்களுக்கு கடிதம் வாயிலாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு
சரணடைகிறோம்! மாநில முதல்வர்களுக்கு கடிதம் வாயிலாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு
UPDATED : நவ 24, 2025 11:58 PM
ADDED : நவ 24, 2025 11:49 PM

புதுடில்லி : ஒட்டுமொத்தமாக சரணடைய விரும்புவதாக, நாடு முழுதும் உள்ள மாவோயிஸ்டுகள், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அரசு வழங்கும் மறுவாழ்வை ஏற்பதாகவும் கூறியுள்ள அவர்கள், சரணடைய அடுத்தாண்டு பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம், அட்டகாசம் அதிகரித்ததை அடுத்து, அதை கட்டுப்படுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்தது.
மத்திய அரசு உறுதி
'அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்ததை அடுத்து, மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரம் அடைந்துள்ளது.
இதனால், கடந்த 11 ஆண்டுகளில், மாவோயிஸ்ட் வன்முறை சம்பவங்கள் 52 சதவீதமும், வன்முறையில் கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 70 சதவீதமும் குறைந்து உள்ளது.
அதேபோல, மாவோயிஸ்ட் வன்முறையால் பலியான பொதுமக்களின் எண்ணிக்கையும் 68 சதவீதமாக சரிந்துள்ளது. அவர்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எண்ணிக்கையும் 62 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும், 287 நக்சல்கள் கொல்லப்பட்டனர்; 1,000க்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 18ம் தேதி, ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா மாநில எல்லையில், அல்லுாரி சீதாராமராஸ் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இது, மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதேசமயம், அரசு கோரிக்கையை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் உட்பட பல்வேறு நக்சல் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள், ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது தொடர்கிறது. இது, போராடி வரும் மாவோயிஸ்ட் அமைப்புகளை மேலும் பலவீனப்படுத்தி உள்ளது.
அவகாசம்
இந்நிலையில், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்டுகள் அமைப்பு, கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
மூன்று மாநிலங்களின் மாவோயிஸ்ட் சிறப்பு மண்டல குழுவின் செய்தி தொடர்பாளர் ஆனந்த், கடந்த 22ம் தேதி எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியதாவது:
நாங்கள் மாவோயிஸ்ட் இயக்கச் செயல்பாடுகளையும், ஆயுதப் போராட்டங்களையும் கைவிட்டு சரணடைய விரும்புகிறோம்; மாநில அரசுகள் வழங்கும் மறுவாழ்வு திட்டத்தை ஏற்க விரும்புகிறோம். நாங்கள் சரணடைய உரிய அவகாசம் வழங்க வேண்டும்.
மாவோயிஸ்ட் அமைப்பில், உறுப்பினர்களாக உள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு, சரணடைய உள்ள செய்தியை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்; அதற்காகவே அவகாசம் கேட்கிறோம். எனவே, நாங்கள் ஒட்டு மொத்தமாக சரணடைய, அடுத்தாண்டு பிப்., 15 வரை அவகாசம் வழங்க வேண்டும்.
அதுவரை, மூன்று மாநில அரசுகளும் நிதானத்தை கடைப்பிடித்து, எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த முறையீட்டின் பின்னணியில் எந்த மறைமுக நோக்கமும் இல்லை. தொலைதுாரத்தில் உள்ள போராளிகளுக்கு இந்த தகவல் சென்று சேரும் வகையில், இந்த கோரிக்கையை அடுத்த சில நாட்களுக்கு வானொலியில் ஒலிபரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
வேட்டை தொடரும்
ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மூன்று மாநிலங்களிலும் அமைதியை மீட்டெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கையாளும் கூடுதல் டி.ஜி.பி., விவேகானந்த் சின்ஹா கூறுகையில், ''இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி உறுதியான கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
''எனவே, உரிய அறிவிப்பு வரும் வரை மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவது தொடரும். அதேசமயம், அவர்கள் சரண் அடைவதற்கான வாசல் திறந்தே உள்ளது.
''எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் அவர்கள் சரணடையலாம்; மறுவாழ்வு வழங்கப்படும்,'' என தெரிவித்துள்ளார்.

