''தாக்குதலுக்கு பாக்., உத்தரவுக்காக காத்திருந்தோம்'': ஆமதாபாத்தில் கைதான 4 ஐ.எஸ் பயங்கரவாதிகள் வாக்குமூலம்
''தாக்குதலுக்கு பாக்., உத்தரவுக்காக காத்திருந்தோம்'': ஆமதாபாத்தில் கைதான 4 ஐ.எஸ் பயங்கரவாதிகள் வாக்குமூலம்
ADDED : மே 22, 2024 09:16 AM

ஆமதாபாத்: பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாக குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்துக்கு, கடந்த 12ம் தேதி, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஆமதாபாத் உட்பட குஜராத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நம் அண்டை நாடான இலங்கையில் இருந்து கடந்த 20ம் தேதி சென்னை வழியாக ஆமதாபாத் வந்த விமானத்தில் பயணித்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவர்கள் இலங்கையைச் சேர்ந்த முஹமது நுஸ்ரத், 33, முஹமது பரிஸ், 35, முஹமது நப்ரான், 27, முஹமது ரஸ்தீன், 43, என தெரிய வந்தது.
உபா சட்டம்
இந்த நான்கு பேரும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், பாகிஸ்தானில் உள்ள அபு பக்கர் என்ற பயங்கரவாதியின் உத்தரவுப்படி, சில சதித்திட்டங்களை தீட்ட ஆமதாபாதுக்கு வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து, பாக்., தயாரிப்பு துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள், ஐ.எஸ்., அமைப்பின் கொடிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இவர்கள் மீது, 'உபா' எனப்படும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், நாடு முழுவதும் மிகப்பெரிய நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும், பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் கைதான பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் எந்த இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூற மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

