நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மக்களுக்கு உரை
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மக்களுக்கு உரை
UPDATED : ஆக 16, 2011 09:06 AM
ADDED : ஆக 15, 2011 08:05 AM

புதுடில்லி: நாட்டின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அமைதியை குலைக்கவும் சிலர் முயற்சி செய்கின்றனர் என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார். மேலும் தமது 7 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சிப்பணிகள் ஏராளம் நடந்திருக்கிறது; இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.
அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் வறுமையை ஒழிக்க அரும்பாடுபட்டு வருகிறோம். ஊழல், நாட்டின் வளர்சிப்பாதைக்கு தடையாக உள்ளது. ஊழலுக்கு காரணமானவர்கள் மீது மீது இந்த அரசு சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதமாக எடுத்து வருகிறது. பலமான லோக்பால் மசோதாவை உருவாக்க அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. ஊழலை ஒழிக்க இந்த மசோதா பயன் தரும். நீதி துறையை இந்த மசோதாவின் கட்டுக்குள் கொண்டு வரமுடியாது காரணம் இதன் சுதந்திர தன்மை பாதிக்கப்படக்கூடும். உண்ணாவிரதமோ , போராட்டமோ வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க முடியாது. பார்லி.,யில் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். மாற்றுக்கருத்து உள்ளவர்கள் பார்லி., முன்பு மக்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.நிலம் கையகப்படுத்துதல் விவசாயிகளை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளப்படும். இதற்கென விரைவில் புதிய சட்டம் நடப்பு பார்லி., கூட்டத்தொடரில் இயற்றப்படும்; வறுமையை ஒழிக்க அனைவரும் ஒரு சேர போராட வேண்டும்.கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். கல்வி மேம்பாட்டுக்கு ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படவிருக்கிறது. பயங்கரவாதம் ஒழிப்பில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
முன்னதாக கொடியேற்ற வந்த பிரதமரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி மற்றும் பல்லம்ராஜ் வரவேற்றனர். ராணுவ முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார்.
சென்னை கோட்டையில் ஜெ., கொடியேற்றினார்: செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின கொடியேற்றி பேசுகையில்: நாட்டினச சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகச்செம்மல்கள் நிறைந்து விளங்கியது தமிழகம். விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட தியாகிகளை நினைவுகூர்ந்திடுவோம். அனைத்து தரப்பு மக்களும் அச்சமின்றி வாழ்வது உண்மையான சுதந்திரம். இதற்கென எனது தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்த அடிமை விலங்கு தகர்த்தெறியப்பட்டுள்ளது.
போலீசார் அஞ்சிய நிலை மாறியது : தமிழகத்தில் கடந்த ஆட்சியில் தமிழகம் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து கிடந்ததை நான் பொறுப்பேற்ற பின்னர் சீர்படுத்தியிருக்கிறேன். சமூக விரோதிகளை கண்டு போலீசார் அஞ்சிய காலம் மாறி காவலர்களை கண்டு சமூக விரோதிகள் அஞ்சும் அளவிற்கு மாற்றியிருக்கிறேன். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழந்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறேன். போலீசாரின் பணியில் அரசின் குறுக்கீடு இல்லாமல் இருப்பதால் போலீசார் சுதந்திரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது போல மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக மகளிர் முதியோர், நெசவாளர்நலன் பெரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பெண்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில், இலவச கிரைண்டர், மிக்சி வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்டமும், வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருதுகளும் ஜெ,. வழங்கினார்.