பெங்களூரை விட்டு வெளியேற மாட்டோம் 'பிளாக்பக்' நிறுவன சி.இ.ஓ., ராஜேஷ் 'பல்டி'
பெங்களூரை விட்டு வெளியேற மாட்டோம் 'பிளாக்பக்' நிறுவன சி.இ.ஓ., ராஜேஷ் 'பல்டி'
ADDED : செப் 20, 2025 03:03 AM

பெங்களூரு: மோசமான சாலைப் பள்ளத்தால் பெங்களூரை விட்டு வெளியேறப் போவதாக கூறிய, 'பிளாக்பக்' நிறுவன சி.இ.ஓ., ராஜேஷ் யபாஷி, தற்போது 'பல்டி' அடித்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூரு பெல்லந்துார் வெளிவட்ட சாலையில் 'பிளாக்பக்' என்ற ஐ.டி., நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவன சி.இ.ஓ., ராஜேஷ் யபாஷி, சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளப் பதிவில், '9 ஆண்டுகளாக பெல்லந்துார் பகுதியில் எங்கள் அலுவலகம், வீடாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது இங்கே தொடர்வது மிகவும் கடினம். நாங்கள் இங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம்.'
'இதற்கு காரணம் எங்கள் அலுவலகம் முன் செல்லும், வெளிவட்ட சாலையின் மோசமான நிலை. இந்த சாலைப் பள்ளங்கள், துாசியால் நிறைந்துள்ளது.
'என் சக ஊழியர்களின் சராசரி பயணம் ஒரு வழி பாதையில் தினமும் ஒன்றரை மணி நேரமாக அதிகரித்துள்ளது. சாலையை சரி செய்வர் என்ற எங்கள் நம்பிக்கை குறைவாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை' என, குறிப்பிட்டிருந்தார்.
ராஜேஷின் இந்த பதிவு வேகமாக பரவிய நிலையில், 'சாலைப் பள்ளங்களால் ஐ.டி., நிறுவனங்கள் நகரை விட்டு வெளியேறுவது துரதிர்ஷ்டம். காங்கிரஸ் அரசு என்ன செய்கிறது?' என, பா.ஜ., கேள்வி எழுப்பியது. தொழில் அதிபர் மோகன் தாஸ் பை, 'பயோகான்' நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் ஷாவும், அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
இந்நிலையில், ராஜேஷ் யபாஜி நேற்று வெளியிட்ட பதிவு:
எங்கள் நிறுவனம் பெங்களூரை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுக்கிறோம். நாங்கள், நகரத்திற்குள் இடம் பெயர்வோம்.
அவ்வாறு செய்யும்போது, நிறுவனத்தின் பெரும்பாலான செயல்பாடு பெல்லந்துாரில் தொடரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தேவைகள், பிரச்னைகள் குறித்து அரசு, அதிகாரிகளிடம் தெரிவித்து அவற்றை தீர்க்க உதவியை நாடுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.