நீதிபதி வீட்டில் பணக்குவியல் வழக்கில் அவசரமாக விசாரிக்க மாட்டோம்: உச்ச நீதிமன்றம்
நீதிபதி வீட்டில் பணக்குவியல் வழக்கில் அவசரமாக விசாரிக்க மாட்டோம்: உச்ச நீதிமன்றம்
ADDED : மார் 29, 2025 01:37 AM

புதுடில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பணக்குவியல்கள் கடந்த 14ம் தேதி கண்டெடுக்கப்பட்டன.
தள்ளுபடி
இதையடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது, நீதித் துறை உள்விசாரணைக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி, மேத்யூஸ் நெடும்பாறா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கறிஞர் மேத்யூஸ் வாதிட்ட தாவது:
நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடத்தும் கமிட்டிக்கு சட்ட அதிகாரம் கிடையாது. குற்றவியல் விசாரணை நடத்த தகுதி பெற்ற விசாரணை அமைப்புகளுக்கு மாற்றாக இவர்களை கருத முடியாது.
விசாரணை நடத்துவது போலீசின் வேலை, நீதிமன்றத்தின் வேலை அல்ல.
பணம் கண்டுபிடிக்கப்பட்ட தினத்தன்று வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? ஒரு வாரத்திற்கு ரகசியம் காக்க வேண்டிய அவசியம் ஏன்ன? குற்றவியல் சட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை? என மக்களுக்கு ஏராளமான கேள்விகள் உள்ளன.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அவசியம் இல்லை
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் உள்விசாரணை முடிந்து, நீதிபதி மீது தவறு இருப்பதாக தெரிய வந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அல்லது இந்த விவகாரத்தை பார்லிமென்டுக்கு அனுப்புவது உட்பட பல்வேறு வாய்ப்புகள் கொலீஜியம் முன் உள்ளன.
அப்படி இருக்கையில், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; அவசரமும் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.