மணிப்பூர் விவகாரத்தை பார்லி.,யில் எழுப்புவோம்: ராகுல் திட்டவட்டம்
மணிப்பூர் விவகாரத்தை பார்லி.,யில் எழுப்புவோம்: ராகுல் திட்டவட்டம்
ADDED : ஜூலை 11, 2024 03:48 PM

புதுடில்லி: 'மணிப்பூர் விவகாரத்தை இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கேள்வி எழுப்புவார்கள்' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
சமீபத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ராகுல், மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மணிப்பூர் மக்களின் நிலைமை குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் இன்று (ஜூலை 11) ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி மணிப்பூருக்கு நேரில் சென்று, மாநில மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, அமைதிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். மணிப்பூர் விவகாரத்தை இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கேள்வி எழுப்புவார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஜூலை 22ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 12ம் தேதி வரை நடக்க உள்ளது. பார்லி.,யில்., மணிப்பூர் விவகாரத்தை கேள்வி எழுப்புவோம் என ராகுல் கூறியுள்ளதால், விவாதங்கள் அனல் பறக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இண்டியா கூட்டணியினருக்கு பா.ஜ.,வினரும் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.