ஜூன் 4ல் ஆட்சியை பிடிப்போம்; 5ல் சிறையில் இருந்து 'ரிலீஸ்': கெஜ்ரிவால் ஆரூடம்
ஜூன் 4ல் ஆட்சியை பிடிப்போம்; 5ல் சிறையில் இருந்து 'ரிலீஸ்': கெஜ்ரிவால் ஆரூடம்
ADDED : மே 13, 2024 04:32 PM

புதுடில்லி: வரும் ஜூன் 4ம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். ஜூன் 5ம் தேதி திஹார் சிறையில் இருந்து நான் வீட்டுக்கு திரும்புவேன் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியது. அவர் ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
சிசிடிவி கேமராக்கள்
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது: சிறையில் என்னை அவமானப்படுத்த முயற்சிகள் நடந்தது. சிறையில் எனது அறைக்குள் இரண்டு சிசிடிவி கேமராக்கள் இருந்தன. பிரதமர் மோடி என்னைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். மோடிக்கு என் மீது என்ன வெறுப்பு என்று எனக்குத் தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மக்களால் மதிக்கப்படுகிறார்கள். மக்கள் எங்களை நேசிக்கின்றனர்.
5ம் தேதி 'ரிலீஸ்'
எங்களின் மக்கள் பணியை கண்டு பா.ஜ., பயப்படுகிறது. ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருப்பேன். இண்டியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். ஜூன் 5ம் தேதி திஹார் சிறையில் இருந்து நான் வீட்டுக்கு திரும்புவேன். இவ்வாறு அவர் பேசினார்.