சட்டசபை தேர்தலில் 294ல் 215 தொகுதிகளில் வெல்வோம்: மம்தா நம்பிக்கை
சட்டசபை தேர்தலில் 294ல் 215 தொகுதிகளில் வெல்வோம்: மம்தா நம்பிக்கை
ADDED : பிப் 27, 2025 04:01 PM

கோல்கட்டா: 'வரும் மேற்குவங்க சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 215 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களில் வெல்வோம். பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் குறைவதை உறுதி செய்வோம்' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் நேதாஜி உள் விளையாட்டு அரங்கில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: டில்லி மற்றும் மஹாராஷ்டிரா, ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களை பதிவு செய்ததால், பா.ஜ., தேர்தலில் வெற்றி பெற்றது. இந்திய தேர்தல் கமிஷன் பாரபட்சமற்றதாக மாறாவிட்டால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடக்காது.
தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமாரை நியமித்துள்ளனர். பா.ஜ., இந்திய தேர்தல் கமிஷனில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது. பா.ஜ.,வின் உதவியுடன் சேர்க்கப்பட்ட போலி வாக்காளர்களை நாங்கள் அடையாளம் காண்போம்.
மேற்கு வங்கத்தை கைப்பற்ற யாரையும் அனுமதிக்க மாட்டோம். வரும் மேற்குவங்க சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 215 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களில் வெல்வோம். பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் குறைவதை உறுதி செய்வோம். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

