பாக்., ‘ட்ரோன்’ வீசிய ஆயுதங்கள் ராஜஸ்தான் எல்லையில் பறிமுதல்
பாக்., ‘ட்ரோன்’ வீசிய ஆயுதங்கள் ராஜஸ்தான் எல்லையில் பறிமுதல்
UPDATED : அக் 13, 2026 09:53 PM
ADDED : அக் 13, 2026 09:48 PM
ஜெய்ப்பூர்: பாகிஸ்தான் ‘ட்ரோன்’ மூலம் ராஜஸ்தான் எல்லையில் வீசப்பட்ட ஆயுத குவியல், வெடிமருந்து பார்சல்களை நம் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பஞ்சாபை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையையொட்டிய வயல்வெளியில் சந்தேகத்திற்கிடமான மூன்று பார்சல்கள் வீசப்பட்டதாக ஏ.என்.டி.எப்., எனப்படும் போதைபொருள் தடுப்பு சிறப்பு படையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசாருடன் அங்கு சென்ற ஏ.என்.டி.எப்., வீரர்கள் கால்வாய் அருகே வயல்வெளியில் கிடந்த பார்சல்களை கைப்பற்றினர். அப்போது அதில் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள், இரு கைத்துப்பாக்கிகள், 650 தோட்டாக்கள், நான்கு ஜோடி பேட்டரிகள், இரு ரிமோட் கன்ட்ரோல் கருவிகள் இருப்பதை கண்டறிந்தனர். இது தொடர்பாக பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் பெரோஸ்பூரை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போதைபொருள் தடுப்பு சிறப்பு படை ஐ.ஜி., விகாஸ் குமார் கூறுகையில்,``பாகிஸ்தான் ட்ரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகளை அனுப்பியது யார், அதை அனுப்பியதன் நோக்கம் என்ன என்பது குறித்து பாதுகாப்பு படையினர் கூட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
