ADDED : நவ 19, 2024 06:37 AM
பெங்களூரு: 'கர்நாடகா முழுதும், அடுத்த இரண்டு வாரம் பரவலாக கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய கர்நாடக இயக்குனர் புவியரசன் கூறியதாவது:
வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதால் கர்நாடகாவில் இன்று (நேற்று) முதல் டிசம்பர் 3 வரை பரவலாக மழை பெய்யும். பெங்களூரு உட்பட பல மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
கடந்த நான்கு நாட்களாக, பெங்களூரில் பரவலாக மழை பெய்கிறது. அடுத்து வரும் நாட்களில், உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு, ஹாசன், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் உட்பட, பல மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் அறிகுறி தென்படுகிறது.
பல்லாரி, தாவணகெரே, ஷிவமொக்கா, துமகூரு, சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல், ஹாவேரி, பெங்களூரு, ராம்நகர், சித்ரதுர்கா, விஜயநகரா, பெலகாவி, உத்தரகன்னடா, தார்வாட் மாவட்டங்களில், சாதாரண மழை பெய்யும்.
இதன் பின், 25ம் தேதிக்கு மேல் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்பதால் அப்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

