UPDATED : அக் 11, 2026 08:18 PM
ADDED : அக் 11, 2026 07:46 PM

ஐபோன் திருட வந்தவன்
பைக்கை பறிகொடுத்து ஓட்டம்
பஞ்சாப், லுாதியானாவில் ஐபோன் ஷோரூமுக்கு வந்த வாலிபர், விலையை விசாரித்துவிட்டு, கையில் எடுத்த ஐபோனுடன் ஓட்டம் பிடித்தார். துரத்திச்சென்ற கடைக்காரர் மீத், தப்பிக்க முயற்சித்த வாலிபரின் பைக்கை கெட்டியாக பிடித்துக் கொண்டார். திருடன் ஆக்சிலரேட்டரை முடுக்க, கடைக்காரரை சாலையில் இழுத்துக்கொண்டே பைக் சென்றது. இப்படியே 15 மீட்டர் துாரம் சென்றதில், தடுமாறிய பைக் கீழே விழுந்தது; திருட்டு ஐபோனும் விழுந்து விட்டது. ‘மாட்டினால் சங்கு தான்’ என்பதை உணர்ந்த திருடன், பைக்கையும், ஐபோனையும் விட்டு தப்பியோடினான்.
‘பைக்கில் இழுத்துச்சென்றதில் முழங்காலில் காயம் ஆனது கூட வருத்தம் இல்லை; அக்கம் பக்கத்து கடைக்காரர் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை’ என்பது தான் கடைக்காரருக்கு வருத்தம்; இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
பெங்களூரு நெரிசலில்
பூத்தது பார் புது நட்பு
பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் காத்திருந்த இருவர் அறிமுகமாகி பேசிய வீடியோ, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. காரில் வந்த அவிநாஷ் ஹெக்டே, பைக்கில் நிற்பவரிடம்,‘புது மாடல் பைக்கா’ என்று கேட்கிறார். அவர், ‘3 வருஷம் ஆச்சு’ என்கிறார். ‘நல்லா மெயின்டெய்ன் பண்றீங்க’ என்கிறார். பைக் பற்றிய உரையாடல் முடிந்ததும், ‘நீங்க எந்த ஊர்’ என்று கேட்க, ‘சுபித் ஜெயின்’ என்றும், ‘வங்காளத்தை சேர்ந்தவர்’ என்றும் கூறுகிறார். தான் மோகன் பகான் கால்பந்து அணி ஆதரவாளர் என்றும், தன் குடும்பத்தினர் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு சப்போர்ட் என்றும் கூறுகிறார் சுபித்.
தன் பெயரை கூறி, தான் ஒரு ஸ்போர்ட்ஸ் கன்டென்ட் கிரியேட்டர் என்று ஹெக்டே கூறியதும், ‘வீடியோ பார்த்திருக்கிறேன்’ என்கிறார் அவர். இருவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்ட வீடியோ, இன்ஸ்டாகிராமில் ஒன்றரை கோடி பார்வையாளர்களை கடந்திருக்கிறது. அறிமுகம் இல்லாதவர்களையும் நண்பர்களை மாற்றும் பெங்களூரு வாகன நெரிசலை, வலைதளவாசிகள் ‘ஓட்டி’ மகிழ்கின்றனர்.
ராத்திரியில் ரகசிய குப்பை
கொட்டியவருக்கு மானம் போச்சு
உ.பி., கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் ஒருவர், ‘வீட்டுக் குப்பையை இரவு நேரத்தில் தெருவோரம் வீசி விட்டால் யாருக்கும் தெரியாது’ என்று எண்ணி வீசுகிறார். அவரது கெட்ட நேரம், அந்த இடத்தில் குடியிருப்போர் சங்கம் நிறுவிய சிசிடிவி கேமரா இருக்கிறது. அதை சங்க நிர்வாகி ஒருவர் கண்காணித்தபடியே இருக்கிறார். குப்பையை போட்டுவிட்டு ஒருவர் செல்வதை கண்ட நிர்வாகி, உடனடியாக சிசிடிவியுடன் இணைந்த மைக்கில் கூப்பிட்டார். ‘குப்பை போட்டவர், அதை உடனடியாக திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் நாளை காலை சங்கம் கூடி கடும் அபராதம் விதிக்கும்’ என்கிறார். அதை திரும்பத் திரும்பவும் சொல்கிறார். ‘மைக்கில் சொல்லி வேறு மானத்தை வாங்குகிறாரே’ என்று நினைத்த அந்த ஆசாமி, வேறு வழியின்றி தான் கொட்டிய குப்பையை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறார். இந்த சம்பவத்தின் வீடியோ, வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
கின்னஸ் சாதனை பூசணி ‘பகீரா’
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஹாம்ப்ஷையரை சேர்ந்த விவசாயி இயான் பேட்டன், உலகில் அதிக எடைக் கொண்ட பூசணிக்காய் விளைவித்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் விளைவித்த பூசணியின் எடை 1295.8 கிலோ. நாவலாசிரியர் ருட்யார்டு கிப்ளிங்கின் ‘ஜங்கிள் புக்’ நாவலில் இடம் பெற்ற சிறுத்தை நினைவாக, ‘பகீரா’ என்று பூசணிக்கு பெயர் சூட்டினார்.
‘பூசணியை பராமரிக்க தினமும் 6 மணி நேரம் செலவிட்டேன்’ என்கிறார் பேட்டன். கோல்ப் பந்து அளவில் இருந்த பூசணிக்காய், 120 நாளில் முழு அளவை எட்டி விட்டது. ஒரே நாளில் அதிகபட்சமாக 32 கிலோ அதிகரித்தது என்கிறார் அவர். கின்னஸ் சாதனை புத்தகத்தின் காய்கறி பிரிவு நடுவர் ஜெரால்டு ஷார்ட், ‘பூமியின் வரலாற்றிலேயே இப்போதுதான் இத்தனை பெரிய காய் உருவாகியுள்ளது’ என்கிறார். அக்டோபர் வரை காட்சிக்கு வைக்கப்படும் இந்த பூசணி, அதன்பிறகு மாட்டுத்தீவனமாக வழங்கப்பட உள்ளது.
டார்ஜிலிங் மலை ரயில்
மோதிய வீடியோ வைரல்
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இயக்கப்படும் இமய மலை ரயில், சுற்றுலா பயணியர் மத்தியில் பிரபலமானது. இங்கு ரயில் பாதையை ஒட்டியே வாகனங்கள் செல்லும் பாதையும் அமைந்துள்ளது. ரயில் செல்லும்போது, ஆர்வக்கோளாறில் பக்கத்தில் சென்ற கார், டூவீலர் மீது ரயில் மோதி விட்டது. இதில் டூவீலரில் சென்ற தம்பதி கீழே விழுந்தனர். நல்ல வேளையாக உயிருக்கு ஆபத்தில்லை. பயணியர் சிலர் எடுத்த இந்த விபத்தின் வீடியோ, வலைதளங்களில் வைரல் ஆனது. பார்த்த பலரும், ரயிலை நெருங்கிச்சென்ற வாகன ஓட்டிகளை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
