ஆதார், பான் கார்டு விவரம் வெளியிட்ட இணையதளங்கள் முடக்கம்; மத்திய அரசு நடவடிக்கை!
ஆதார், பான் கார்டு விவரம் வெளியிட்ட இணையதளங்கள் முடக்கம்; மத்திய அரசு நடவடிக்கை!
ADDED : செப் 27, 2024 01:35 PM

புதுடில்லி: ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிடும் பல்வேறு இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக்குழு இணையதளப் பக்கங்களை கண்காணித்து வருகிறது. மக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சில இணையதளங்கள் வெளியிடுவது தெரியவந்தது. அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'இந்திய மக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை வெளியிடுவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு வந்த தகவல் அடிப்படையில், பல்வேறு இணையதள பக்கங்களை முடக்கி, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புக்கு இணங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தனிப்பட்ட விவரங்கள் கசிந்தால் அவர்கள் ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாக நேரிடும்.
கசிந்த தகவல்களால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டால், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்து இழப்பீடு பெறலாம். இதற்கு தகவல் தொழில்நுட்ப செயலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அதிகாரிகள் 3.1 கோடி வாடிக்கையாளர்களின் டேட்டாவை விற்றுள்ளதாக ஹேக்கர் ஒருவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

