UPDATED : பிப் 10, 2024 06:38 AM
ADDED : பிப் 10, 2024 06:16 AM

சித்ரதுர்கா: அரசு மருத்துவமனையில், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷுட் நடத்திய, டாக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.
திருமணத்திற்கு முந்தைய, பிந்தைய போட்டோ ஷுட் இப்போது பிரபலமாகி உள்ளது. படகில் சென்றபடி, அருவி உச்சியில் நின்றபடி உட்பட பல்வேறு கற்பனைகளில், புதுமண தம்பதிகள் போட்டோ ஷுட் எடுத்து வருகின்றனர்.
ஆனால், டாக்டர் ஒருவர் சற்று வித்தியாசமாக யோசித்து, திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷுட் எடுத்து, சிக்கலில் சிக்கி உள்ளார்.
சித்ரதுர்காவின் பரமசாகரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில், டாக்டராக வேலை செய்தவர் அபிஷேக், 30. இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்திற்கு முந்தைய 'போட்டோ ஷுட்' எடுக்க ஆசைப்பட்டார். இதனால் வருங்கால மனைவியை, தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஒருவரை படுக்கையில் படுக்க வைத்து, அவருக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அபிஷேக்கிற்கு, வருங்கால மனைவி மருத்துவ உபகரணங்கள் எடுத்துக் கொடுத்து, உதவி செய்வது போலவும், 'போட்டோ ஷுட்' எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் அபிஷேக்கிற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 'மருத்துவ தொழிலை கொச்சைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அவரை 'சஸ்பெண்ட்' செய்து, சித்ரதுர்கா கலெக்டர் வெங்கடேஷ் நேற்று உத்தரவிட்டார்.