ரயில் நிலையங்களில் எடை கட்டுப்பாடு; ஏர்போர்ட் விதியை பின்பற்ற முடிவு
ரயில் நிலையங்களில் எடை கட்டுப்பாடு; ஏர்போர்ட் விதியை பின்பற்ற முடிவு
ADDED : ஆக 20, 2025 05:15 AM

புதுடில்லி: விமான நிலையங்களில் பின்பற்றப்படும் எடை விதிமுறையை, முக்கிய ரயில் நிலையங்களில் பின்பற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்களில் பயணியர் எவ்வளவு எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. ஆனாலும், அவை எப்போதாவது தான் பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் உ.பி.,யின் பிரயாக்ராஜ், கான்பூர், மிர்சாபூர், அலிகாரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் புதிய எடை விதிமுறையை பின்பற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி கூறியதாவது:
விமான நிலையங்களில் பின்பற்றப்படும் எடை விதிமுறையை முக்கிய ரயில் நிலையங்களில் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெரிசலை குறைத்தல், அமரும் இடங்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை எளிதாக்கும் வகையில் இந்த விதிமுறை கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 'ஏசி' முதல் வகுப்பு பயணியர், 70 கிலோ வரையிலான உடைமைகளை இலவசமாக எடுத்து செல்லலாம். இரண்டாம் வகுப்பு 'ஏசி' பயணியர், 50 கிலோ, 'ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி பயணியர் 40 கிலோ, பொதுப் பெட்டிகளில் பயணிப்போர் 35 கிலோ லக்கேஜை கட்டணமின்றி எடுத்து செல்லலாம்.
அமரும் இடத்தை அடைக்கும் அளவுக்கு எடையுள்ள பொருட்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பெரிய பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல முடியாது. கூடுதலாக உள்ள உடைமைகளை, பயணத்தைத் துவங்கும் முன்னரே லக்கேஜ் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.