'பல்லக்கு' பஸ்களுக்கு வரவேற்பு 100 பேருந்துகள் வாங்க முடிவு
'பல்லக்கு' பஸ்களுக்கு வரவேற்பு 100 பேருந்துகள் வாங்க முடிவு
ADDED : ஜன 02, 2024 06:45 AM
பெங்களூரு: 'பல்லக்கு' பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட, ஸ்லீப்பர் சொகுசு பஸ் போக்குவரத்துக்கு, மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், மேலும் 100 பல்லக்கு ஸ்லீப்பர் பஸ்களை இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் அன்புகுமார் கூறியதாவது:
ஐராவத், அம்பாரி போன்று, அதி நவீன வசதிகள் உள்ள, 'பல்லக்கு' என்ற பெயர் கொண்ட ஸ்லீப்பர் சொகுசு பஸ் போக்குவரத்தை, கே.எஸ்.ஆர்.டி.சி., துவக்கியது. 2023 அக்டோபர் 7ல், முதல்வர் சித்தராமையா பெங்களூரில் பஸ் போக்கு வரத்தை துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக, 40 பல்லக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இவைகளுக்கு பயணியரிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இருக்கைகள் 100 சதவீதம் நிரம்புகின்றன. ஒவ்வொரு பஸ்சிலும் 30 ஸ்லீப்பர் பர்த் உள்ளது. மொபைல் போன் ஹோல்டர், சார்ஜர், காலனிகள் வைக்க இட வசதி உள்ளது.
எமர்ஜென்சி அலெர்ட், ஆடியோ வழியாக பயணியருக்கு தெரிவிப்பது, அவர்களிடம் தகவல் பெறும் வசதி உள்ளது. இருக்கை எண் மீது எல்.இ.டி., ஒளி, டிஜிட்டல் கடிகாரம் என, அதிநவீன வசதிகள் கொண்டுள்ளது. ஓட்டுனருக்கு உதவும் அதிநவீன கேமராவும் உள்ளது.
தொந்தரவின்றி நிம்மதியாக பயணிக்கலாம் என்பதால், பல்லக்கு பஸ்களில் பயணிக்க ஆர்வம் காண்பிக்கின்றனர். தொலை துாரம் பயணிக்கும் மக்கள், இந்த பஸ்களை விரும்புகின்றனர். கட்டணமும் அதிகம் இல்லை. நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மேலும் 100 பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

