ADDED : அக் 24, 2024 12:35 AM

முதல்வர் சித்தராமையாவுக்கு கேரளாவில் கிடைத்த வரவேற்பை பார்த்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வாயடைத்து நின்றார்.
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் பிரியங்கா போட்டியிடுகிறார். நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின், வயநாட்டில் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நடந்தது.
மேடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, வேட்பாளர் பிரியங்கா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அமர்ந்திருந்தனர். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது மேடையில் ஏறி, கர்நாடக முதல்வர் சித்தராமையா நடந்து வந்தார். அவரை பார்த்ததும் கேரள காங்கிரஸ் தொண்டர்கள், ஆரவாரம் எழுப்பினர்.
'சித்தராமையாவுக்கு ஜே' என்று முழங்கினர். பதிலுக்கு அவர் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, ராகுல் தன் பேச்சை நிறுத்தி, அப்படியே வாயடைத்து நின்றார்.
ஆராவாரம் அடங்கியதும் இரண்டு நிமிடங்களுக்கு பின், பேச்சை மீண்டும் தொடர்ந்தார்.
-நமது நிருபர் -

