நல ஓய்வூதிய மோசடி: மண் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்
நல ஓய்வூதிய மோசடி: மண் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்
ADDED : டிச 19, 2024 04:15 PM

திருவனந்தபுரம்: கேரள அரசின் மண் ஆய்வு மற்றும் மண் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 6 ஊழியர்கள், மாதாந்திர நலத் திட்ட ஓய்வூதியத்தை சட்டவிரோதமாகப் பெற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 ஊழியர்களும் முறைகேடாகப் பெற்ற ஓய்வூதியத் தொகை முழுவதையும் அபராதமாக 18 சதவீத வட்டியுடன் சேர்த்து வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான்கு பகுதி நேர துப்புரவு பணியாளர்கள், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் கிரேடு-II அலுவலக உதவியாளர் ஆகியோர் மீது நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் நல ஓய்வூதியம் அல்லது முதியோர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தைப் பெறுவதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இத்தகைய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் காசர்கோடு மாவட்ட மண் பாதுகாப்பு அலுவலகத்தில் கிரேடு-II அலுவலக உதவியாளர் சஜிதா,வடகரை மண் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளர் நசீத் முபாரக் மன்சில்,பத்தனம்திட்டா மண் பாதுகாப்பு அலுவலகத்தில் பகுதி நேர துப்புரவு பணியாளர் ஷீஜாகுமாரி,மீனங்காடி மண் பாதுகாப்பு அலுவலகத்தில் பகுதி நேர துப்புரவு பணியாளர் பார்கவி, மீனங்கடி மண் பாதுகாப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில் பகுதி நேர துப்புரவு பணியாளர் லீலா,மற்றும் திருவனந்தபுரம் மத்திய மண் பகுப்பாய்வு ஆய்வகத்தில் பகுதி நேர துப்புரவாளர் ரஜனி ஆகியோர் அடங்குவர்.
அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரிகள் உட்பட சுமார் 1,458 அரசு ஊழியர்கள் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவதாக மாநில நிதித் துறையின் சமீபத்திய உண்மை கண்டறியும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தணிக்கையின் போது, மலப்புரத்தில் உள்ள கோட்டக்கல் நகராட்சியில் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் நிதித்துறை பெரும் முறைகேடுகளைக் கண்டறிந்தது. இதையடுத்து, தகுதியில்லாத பயனாளிகளிடமிருந்து மோசடி செய்யப்பட்ட ஓய்வூதியத் தொகையை மீட்டு, கூடுதலாக 18 சதவீத வட்டி வசூலிக்க உள்ளாட்சி நிர்வாகத்துக்கு, டிச.12 ல் மாநில அரசு உத்தரவிட்டது. மேலும், சட்ட விரோதமாக ஓய்வூதியம் வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டது.
அரசு நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், மண் ஆய்வு மற்றும் மண் பாதுகாப்புத் துறையின் தலைவர் மற்றும் வேளாண்மை உற்பத்தி இயக்குநர், இந்த 6 ஊழியர்களும் சட்டவிரோதமாகப் பெற்ற ஓய்வூதியத் தொகை முழுவதையும் 18 சதவீத வட்டியுடன் சேர்த்து வசூலிக்க உத்தரவு பிறப்பித்தார்.

