தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைப்பா? விசாரணைக்கு உத்தரவு
தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைப்பா? விசாரணைக்கு உத்தரவு
UPDATED : ஜூலை 21, 2025 07:54 AM
ADDED : ஜூலை 21, 2025 12:22 AM

பெங்களூரு: கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, மஞ்சுநாதா கோவிலின் முன்னாள் ஊழியர் அளித்த புகார் குறித்து விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்து உள்ளது.
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான, தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகா, தர்மஸ்தலாவில், பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் உள்ளது.
இங்கு, 21 ஆண்டுகளுக்கு முன் ஊழியராக வேலை செய்த பீமா என்பவர், கடந்த 4ம் தேதி தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், '1998ம் ஆண்டு முதல் 2004 வரை, மஞ்சுநாதா கோவிலில் துாய்மை பணியாளராக வேலை செய்தேன்.
இந்த காலகட்டத்தில் கோவிலின் அருகில் ஓடும், நேத்ராவதி ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி புதைத்தேன்' என, கூறியிருந்தார்.
சி.பி.ஐ.,யில் பணியாற்றி ஓய்வு பெற்ற, பெங்களூரை சேர்ந்த சுஜாதா பட் என்ற பெண்மணியும், '2003ல் தர்மஸ்தலா சென்ற எனது மகள் அனன்யா பட்டை காணவில்லை.
'அவரை கொன்று புதைத்து இருக்கலாம்' என, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில், சில தினங்களுக்கு முன் புகார் அளிக்க, இந்த விவகாரம் சூடு பிடித்தது.
பிற மாவட்டங்கள்
இந்நிலையில், கர்நாடக அரசின் உள்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் தர்மஸ்தலாவில் நடந்ததாக கூறப்படும் பெண்கள் மற்றும் மாணவியரின் இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அரசு அமைத்து உள்ளது.
தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, தர்மஸ்தலா சென்று பெண்கள், மாணவியர் காணாமல் போனதாக மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இனி பதிவு செய்யப்பட உள்ள வழக்குகளையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும்.
விசாரணை குழுவின் தலைவராக, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி செயல்படுவார்.
குழுவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான ஆள்சேர்ப்பு பிரிவு டி.ஐ.ஜி., அனுசேத், பெங்களூரு நகர ஆயுதப்படை டி.சி., சவும்யலதா, உடுப்பி நக்சல் தடுப்பு படை எஸ்.பி., ஜிதேந்திர குமார் தயமா ஆகியோர் இருப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.