'கல்லுாரி விடுதியில் உள்ள மாணவியர் நள்ளிரவில் வெளியே வரவேண்டாம்' மே.வங்க முதல்வர் மம்தா கருத்துக்கு வலுக்கும் கண்டனம்
'கல்லுாரி விடுதியில் உள்ள மாணவியர் நள்ளிரவில் வெளியே வரவேண்டாம்' மே.வங்க முதல்வர் மம்தா கருத்துக்கு வலுக்கும் கண்டனம்
ADDED : அக் 14, 2025 12:18 AM

கொல்கட்டா: 'கல்லுாரி விடுதியில் தங்கியுள்ள மாணவியர், நள்ளிரவில் வெளியே வரவேண்டாம்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு ப ல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
கூட்டு பலாத்காரம் இங்குள்ள மேற்கு வர்தமான் மாவட்டம் துர்காபூரில், தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது.
இங்கு எம்.பி.பி.எஸ்., படித்து வரும் ஒடிஷாவை சேர்ந்த மாணவி, கடந்த 10ம் தேதி இரவு, தன் ஆண் நண்பருடன் உணவருந்திவிட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களை வழிமறித்த கும்பல், பணம் கேட்டு மிரட்டியது. ஆண் நண்பரை பணம் எடுத்து வரும்படி விரட்டிவிட்டு, மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியது.
இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'நள்ளிரவு 12:30 மணிக்கு விடுதியில் இருந்து மாணவி வெளியேறியது எப்படி? இந்த சம்பவத்துக்கு, அக்கல்லுாரி நி ர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். விடுதிகளில் தங்கும் மாணவியர், இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு 'தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் போலீசாரால் பாதுகாப்பு அளிக்க முடியாது' என, தெரிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரில், 'விடுதியில் இருந்து மாணவி, இரவு 8:00 மணிக்கு வெளியேறினார்' என, தெரிவித்துள்ளார்.
கல்லுாரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்ட தகவலிலும், அந்த நேரமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் மம்தாவின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இது குறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., அக்னிமித்ரா பால் கூறுகையில், “ஆப்கன் போல, மேற்கு வங்கத்திலும், மம்தா தலைமையில் தலிபான் அரசு நடக்கிறது. இங்கு, பெண்கள் நள்ளிரவுக்குப் பின் வெளியே வரவேண்டாம் என கூறுகிறார்.
''நள்ளிரவில் மக்கள் அலுவலகங்களுக்குச் செல்லமாட்டார்கள், டாக்டர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லமாட்டார்கள். நள்ளிரவுக்குப் பின் வெளியே வந்தால் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவர் என, முதல்வர் கூறுகிறார்,” என, தெரிவித்துள்ளார்.
இதை மறுத்துள்ள முதல்வர் மம்தா, ஊடகங்களில் பேசிய தன் கருத்து, திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.