சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் துவக்கிய மேற்குவங்க டாக்டர்கள்
சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் துவக்கிய மேற்குவங்க டாக்டர்கள்
ADDED : அக் 06, 2024 01:48 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நேற்று (அக்டோபர் 05) முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை டாக்டர்கள் துவக்கினர்.
மேற்குவங்கம், கோல்கட்டா அரசு மருத்துவமனையில் ஆக.9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
பணி செய்யும் இடங்களில் சி.சி.டி.வி., கேமரா உள்பட பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக முதல்வர் மம்தா ஒப்புக்கொண்டார். செப்டம்பர் 21ம் தேதி முதல் டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.
ஆனால் டாக்டர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக் கொண்டபடி செயல்படுத்தவில்லை என கூறி ஜூனியர் டாக்டர்கள் கடந்த அக்.01) ம் தேதி மத்திய கோல்கட்டாவில் தர்மதாலாவில் மீண்டும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கினர்.
அப்போது தங்கள் கோரிக்கையை 24 மணிநேரத்திற்குள் நிறைவேற்றவேண்டும் இல்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
அரசிடமிருந்து எந்த பதிலும் வரைவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.. இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர்.
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், ஜூனியர் டாக்டர்கள் சாகும் வரை போராட்டத்தை துவக்கியுள்ளது அம்மாநில அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுத்துள்ளது.