'காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்' மேற்கு வங்க கவர்னர் விமர்சனம்
'காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்' மேற்கு வங்க கவர்னர் விமர்சனம்
ADDED : ஏப் 20, 2025 01:24 AM

கொல்கட்டா: “மேற்கு வங்கத்தில், வன்முறையாளர்கள் நடத்தியது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்,” என, அம்மாநில கவர்னர் அனந்த போஸ் விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிராக சமீபத்தில் போராட்டங்கள் நடந்தன.
முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை, 274 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையை நிராகரித்து, வன்முறை பாதிக்கப்பட்ட மால்டா பகுதிக்கு கவர்னர் அனந்த போஸ், நேற்று முன்தினம் சென்றார். அங்கு தற்காலிக முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
முரணான தகவல்கள்
இதைத்தொடர்ந்து, முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜாப்ராபாத் பகுதியில் வன்முறையாளர்களால் கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு கவர்னர் அனந்த போஸ் நேற்று சென்றார்.
அங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார்.
இதன்பின், செய்தியாளர்களிடம் கவர்னர் அனந்த போஸ் கூறியதாவது:
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவங்கள் பற்றி முரணான தகவல்கள் வந்தன. எனவே, நானே நேரில் ஆய்வு செய்ய வந்தேன். இங்கு, நான் கண்ட காட்சிகள் விசித்திரமாக இருந்தன.
இங்குள்ள மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்முறையாளர்கள் அரங்கேற்றியுள்ளனர். இது, மனித நடத்தையின் மோசமான செயல்பாடு.
பொய்த்தது நம்பிக்கை
பொதுவாக வன்முறை சம்பவங்கள், தேர்தலையொட்டி தான் அரங்கேறும். ஆனால், மேற்கு வங்கத்தில் அடிக்கடி நடக்கின்றன. ஒரு சாரார், மற்றொரு சமூகம் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் சூழல் நிலவுகிறது. இந்த ஆட்சியின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்து போயுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கான நடவடிக்கையை நிச்சயம் மேற்கொள்வேன்.
இதுதவிர, தங்கள் பகுதியில் நிரந்தரமான எல்லைப் பாதுகாப்பு படையினரின் முகாமை அமைக்கும்படியும் கேட்டுள்ளனர். அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை கேட்டறிந்து, மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் அறிக்கை அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து முர்ஷிதாபாதின் மாவட்டத்தின் துாலியன், சுதி, ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கவர்னர் அனந்த போஸ் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, பெட்போனா என்ற பகுதியில் உள்ள மக்களை சந்திக்காமல் கவர்னரின் கான்வாய் கடந்து சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த கவர்னர், பெட்போனா பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்ததுடன், குறைகளையும் கேட்டறிந்தார்.