மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: நேரில் மருத்துவமனை சென்ற மம்தா
மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: நேரில் மருத்துவமனை சென்ற மம்தா
ADDED : ஏப் 21, 2025 04:16 PM

கோல்கட்டா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முர்ஷிதாபாத்தில் வக்ப் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை அவர் அண்மையில் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.
இந் நிலையில், திடீரென ஆனந்த போஸூக்கு நெஞ்சுவலி ஏற்பட, உடனடியாக கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
உரிய பரிசோதனைகளுக்கு பின்னர், அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கவர்னரின் உடல்நிலை பற்றிய தகவலறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
அங்கு அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், கவர்னர் உடல்நலமில்லாமல் இருப்பதை அறிந்து மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். இதுதொடர்பான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
கவர்னர் ஆனந்த போஸ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை ராஜ்பவன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளது.