வன்முறை பாதித்த பகுதிகளில் மேற்கு வங்க கவர்னர் ஆய்வு
வன்முறை பாதித்த பகுதிகளில் மேற்கு வங்க கவர்னர் ஆய்வு
ADDED : ஏப் 19, 2025 12:58 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மால்டா பகுதியில், அம்மாநில கவர்னர் சி.வி.அனந்த போஸ் நேற்று ஆய்வு நடத்தினார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிராக சமீபத்தில் போராட்டங்கள் நடந்தன.
முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை, 270க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பா.ஜ.,வினர் தான் காரணம் என, முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். இதற்கிடையே, வன்முறை பாதித்த பகுதிகளில் கவர்னர் அனந்த போஸ் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு முதல்வர் மம்தா, அப்பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எனினும், கவர்னர் அனந்த போஸ் அதை ஏற்காமல், வன்முறையால் பாதிக்கப்பட்ட மால்டா மாவட்டத்திற்கு ரயிலில் நேற்று சென்றார். அங்கு தற்காலிக முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து பேசினார்.
அப்போது வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குறைகளை, கவர்னர் அனந்த போஸ் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கு இன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தேசிய மகளிர் கமிஷன் தலைவி விஜயா ரஹாத்கர் தலைமையிலான குழுவினர், மால்டா மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகளின் நிலை குறித்து கேட்டறிந்தனர். இதேபோல், தேசிய மனித உரிமைகள் கமிஷனின் குழுவும் நேரில் ஆய்வு செய்தது.