கொடுமை கொடுமை என்று போராட போனால் அங்கே இன்னொரு பெருங்கொடுமை; மேற்கு வங்கத்தில் மீண்டும் சம்பவம்
கொடுமை கொடுமை என்று போராட போனால் அங்கே இன்னொரு பெருங்கொடுமை; மேற்கு வங்கத்தில் மீண்டும் சம்பவம்
ADDED : செப் 02, 2024 06:58 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம்
கடந்த மாதம் கோல்கட்டாவின் ஆ.ஜி., கர் மருத்துவமனையில் பணியில் இருந்த இளம் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டம்
அந்த வகையில், அம்ரா திலோத்தமா எனும் அமைப்பு சார்பில் இளம்பெண் டாக்டர் கொலை சம்பவத்தைக் கண்டித்து கோல்கட்டாவில் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொல்லை
இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவருக்கு அங்கிருந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த நபரை மடக்கி பிடித்த சக போராட்டக்காரர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி, அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
புகார்
இதனால், கடுப்பான அந்தப் பெண், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர் மற்றும் அந்த நபரை விடுவித்த போலீஸ்காரர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.