மேற்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு தருவார்கள் ராமதாஸ் அணி எம்.எல்.ஏ., அருள் பேட்டி
மேற்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு தருவார்கள் ராமதாஸ் அணி எம்.எல்.ஏ., அருள் பேட்டி
ADDED : ஏப் 05, 2026 05:22 AM
சேலம் :பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் - சசிகலா கூட்டணியில், பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், சேலம் மேற்கு தொகுதி
யில் போட்டியிடுகிறார். இவர், சேலம் மேற்கு தொகுதி தேர்தல் அலுவலர் ஜானகியிடம், நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
தொடர்ந்து, அருள் அளித்த பேட்டி: கடந்த, 2021ல் மேற்கு தொகுதி வேட்பாளராக ராமதாஸ் அறிவித்தார். அதன்படி நான், 1,825 நாட்கள், மக்கள் தொண்டனாக மக்கள் சொல்லும் பணிகளை சேவகனாக செய்து வருகிறேன். முன்பு போட்டியிட்ட சின்னம், தற்போது இல்லை என்பதை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ராமதாஸிடம் இருந்து மாம்பழ சின்னத்தை பறித்துக்கொண்டனர்.
எனக்கான சின்னம், வரும், 7ல் உறுதி செய்யப்படும். சிலிண்டர் சின்னத்தை கேட்டுள்ளோம். மேற்கு தொகுதி மக்கள், எனக்கு மீண்டும் வாய்ப்பு தருவார்கள். பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள். இத்தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடுபவர்களில் ஒருவர் பண்ணையாளர். இருவர் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள். இவர்கள் இருவரும் மக்களை சிந்திக்காதவர், மதிக்காதவர்கள். சட்டசபையில் பேசியது இல்லை. ஆனால் நான், 35,000 கேள்விகள் கேட்டுள்ளேன். இன்னொரு வேட்பாளர் போலீசில் இருந்து லஞ்சம் வாங்கி திளைத்தவர். அவர் பேரை சொன்னாலே, லஞ்சத்தை எப்படி வாங்கினார் என்று எல்லோருக்கும் தெரியும். என் மீது, 5 ஆண்டில் சிறிதளவும் குறை சொல்ல முடியாத, உங்கள் சேவகன். நிச்சயம் எனக்கு மக்கள் ஓட்டளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அருளுக்கு, ராமதாஸ் சார்பில் ஓட்டளிக்க வேண்டும்.
எனக்கு எதிரே உள்ளவர்களை போல் ஏமாற்ற மாட்டேன். 5 முறை தோற்றேன். 6ம் முறை என்னை மக்கள் வெற்றி பெற வைத்தார்கள். அவர்களுக்கு உழைத்து இருக்கிறேன். தெய்வத்தை நம்புகிறேன். சேவையை நம்புகிறேன். ராமதாசின் நுாற்றாண்டு சேவையை நம்புகிறேன். கடந்த, 2021ல் கொரோனாவால் ஆக்ஸசின் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது நான் முதல் வேலையாக ஆக்ஸிஜன் சிலிண்டர் தேடி எடுத்தேன். இன்று அதே எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு. அதனால் தற்போது அதே சிலிண்டர் சின்னம் எனக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, வேட்பு மனுவின்போது, மாநகர் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், மேற்கு மாவட்ட தலைவர் கோவிந்தன் உள்ளிட்ட
கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
