என்னாது... உ.பி., அரசை விட ஓநாய்கள் அதி புத்திசாலியா ? : பெண் அமைச்சரின் சர்ச்சை பேட்டி
என்னாது... உ.பி., அரசை விட ஓநாய்கள் அதி புத்திசாலியா ? : பெண் அமைச்சரின் சர்ச்சை பேட்டி
ADDED : செப் 06, 2024 10:06 PM

லக்னோ: நம் அரசை விட ஓநாய்கள் புத்திசாலியாக இருக்கிறது என உபி. மாநில பெண் அமைச்சர் பேட்டியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பஹ்ராச் மாவட்டம் மாஷி தாலுகாவில் வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழையும் மர்ம விலங்குகள், மனித வேட்டையாடுகின்றன. சிறு குழந்தைகளை இழுத்துச்சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளன. கடந்த, 45 நாட்களில் மட்டும் ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரைக் கொன்றுள்ளன.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் மனித வேட்டை நடத்தியது சாதாரண ஓநாய்கள் என வனத்துறை அறிவித்தது. வனத்துறையினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு, நான்கு ஓநாய்களை பிடித்தனர். ஆனாலும் ஓநாய்கள் பதுங்கியிருந்து தாக்குவது இன்று வரை தொடர்ந்து நடக்கிறது.
இது குறித்து உ.பி. மாநில பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை பெண் அமைச்சர் பேபி ராணி மவுரியா இன்று ஜான்சி மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,ஓநாய்களின் அட்டகாசம் வேதனை அளிக்கிறது. பல்வேறு குழுக்களை அமைத்து ஓநாய்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற ஓநாய்கள் நம் அரசை விட அதி புத்திசாலியாக இருப்பதால் அவற்றை பிடிப்பது எளிதான காரியமல்ல. விரைவில் அனைத்து ஓநாய்களும் பிடிபடும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார். அரசை விட ஓநாய்கள் புத்திசாலி என அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.