ADDED : ஜன 01, 2025 12:11 AM

கர்நாடகாவில், கடந்த 2019 ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு இருந்த நேரத்தில், லோக்சபா தேர்தல் நடந்தது. மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் பா.ஜ., வென்றது.
காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ் வெற்றி பெற்று இருந்தார்.
மத்திய அரசிடம் இருந்து, கர்நாடகாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பா.ஜ., - எம்.பி.,க்கள் வாங்கி தருவது இல்லை. பிரதமர் மோடியை பார்த்தால் பா.ஜ., - எம்.பி.,க்கள் நடுங்குகின்றனர் என்று சித்தராமையா, சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
கடந்த ஏப்ரலில் நடந்த லோக்சபா தேர்தலின் போதும், கர்நாடக பா.ஜ., - எம்.பி.,க்கள் மாநிலத்திற்காக எதுவுமே செய்யவில்லை. அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்தது.
சுரேஷ் தோல்வி
ஆனால், இம்முறை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த முறை ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ், இம்முறை 9 இடங்களில் வென்றது.
பல்லாரியில் துக்காராம், பீதரில் சாகர் கன்ட்ரே, சாம்ராஜ்நகரில் சுனில் போஸ், சிக்கோடியில் பிரியங்கா ஜார்கிஹோளி, கலபுரகியில் ராதாகிருஷ்ணா, ஹாசனில் ஸ்ரேயஷ் படேல், கொப்பாலில் பசவராஜ் ஹிட்னால், ராய்ச்சூரில் குமார் நாயக், தாவணகெரேயில் பிரபா மல்லிகார்ஜுன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கடந்த 2019ல் வெற்றி பெற்று, மத்திய அரசுக்கு எதிராக பேசி வந்த சுரேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வெற்றி பெற்ற ஒன்பது பேரின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால் இதுவரை எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல அவர்கள் செயல்பட ஆரம்பிக்கவில்லை.
லோக்சபாவில் பதவி ஏற்ற பின், ஒன்பது எம்.பி.,க்களும் என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை. லோக்சபா கூட்டத்தொடரில் கூட பெரிய அளவில் எதுவும் பேசவில்லை.
ஸ்ரேயஷ் படேல்
கர்நாடக பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி எம்.பி.,க்கள் ஒவ்வொரு நாளும், பல துறைகளின் மத்திய அமைச்சர்களை சந்தித்து, தங்கள் தொகுதிக்கு என்ன வேண்டும் என்பது தொடர்பாக, கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர்.
ஆனால் காங்கிரஸ் எம்.பி.,க்கள் யாரும், மத்திய அமைச்சர்களை சந்தித்தது போன்று தெரியவில்லை.
இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகையில், 'எங்கள் எம்.பி.,க்கள் ஒன்பது பேரும், முதல்முறை வெற்றி பெற்று, லோக்சபாவுக்கு சென்று உள்ளனர்.
'அவர்களை வழிநடத்த நமது மாநிலத்தில் இருந்து, காங்கிரசில் மூத்த எம்.பி., யாரும் அங்கு இல்லை. ஒருவேளை சுரேஷ் வெற்றி பெற்று இருந்தால், அவரது தலைமையின் கீழ் எம்.பி.,க்கள் செயல்பட்டு இருப்பர்.
'கூட்டணி என்பதால் மத்திய அமைச்சர்களை சந்திக்க பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி எம்.பி.,க்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் நமது எம்.பி.,க்களுக்கு நேரம் உடனடியாக ஒதுக்கப்படவில்லை.
'எம்.பி.,யாக பொறுப்பு ஏற்று இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அதற்குள் அவர்கள் மீது எதிர்பார்ப்புகளை திணிப்பது சரியாக இருக்காது. இன்னும் நிறைய நேரம் உள்ளது. காங்கிரஸ் எம்.பி.,க்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவர்' என்று கூறுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது போல, எம்.பி.,க்கள் நேரம் வரும் போது தங்கள் திறமையை வெளிப்படுத்துவரா அல்லது எம்.பி.,யாகி விட்டோம், கடமைக்காவது டில்லி செல்ல வேண்டும் என்று நினைத்து, சோடை போவரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
குறிப்பாக ஹாசன் எம்.பி., ஸ்ரேயஷ் படேல் மீது தான், அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏன் என்றால் ஹாசன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் தொகுதி. அவரது பேரன் பிரஜ்வலை தோற்கடித்து எம்.பி., ஆகி இருப்பதால், ஹாசனுக்கு என்ன செய்ய போகிறார் என்று, மக்கள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.
- நமது நிருபர் -

