ADDED : அக் 18, 2024 07:40 AM

பெங்களூரு: ''அரசியலில் பெண்களை ஊறுகாய் போன்று பயன்படுத்துகின்றனர்,'' என காங்., மூத்த தலைவி மோட்டம்மா, சொந்த கட்சியினர் மீதே அதிருப்தி தெரிவித்தார்.
பெங்களூரின் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கர்நாடக மகளிர் காங்., தலைவியாக, சவும்யா ரெட்டி பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் மூத்த தலைவி மோட்டம்மா பேசியதாவது:
அரசியல் தலைவிகள், கட்சி பணியை செய்து கொண்டு திரிந்தால், எதுவும் நடக்காது. ஒற்றுமையாக போராடி, நமது உரிமைகளை பெற வேண்டும். அரசியலில் பெண் தலைவிகளை, ஊறுகாய் போன்று பயன்படுத்துகின்றனர்.
மகளிர் காங்கிரஸ் பிரிவில், பெண்கள் முன்னிலைக்கு வர வேண்டும். கட்சியில் வேலை செய்யுங்கள் என, எங்களை அழைக்கின்றனர். ஆனால் எந்த பதவியும் வழங்குவது இல்லை. பெண்களுக்கு கூடுதல் பதவிகள் அளிக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலின் போது, கர்நாடக காங்கிரசுக்கு ஐந்து செயல் தலைவர்களை நியமித்தனர். அதில் ஒன்றையாவது பெண்களுக்கு கொடுத்தனரா. நாங்கள் சீட் கேட்க சென்றால், பணம் உள்ளதா என, கேட்கின்றனர். உங்கள் கணவர் செலவு செய்வாரா என, கேள்வி எழுப்புகின்றனர். நமக்கும் கட்சியை பலப்படுத்தும் திறன் உள்ளது. நமக்கு ஏன் பதவி கொடுப்பதில்லை. இதை பற்றி நாம் கேட்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.