ADDED : பிப் 17, 2024 05:07 AM

எனது சொந்த ஊர் திருநெல்வேலி. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில், மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். மெட்ரோ ரயில் பாதையை 44 கிலோ மீட்டர் துாரத்திற்கு விஸ்தரிப்பாக, பட்ஜெட்டில் கூறி உள்ளனர். இது வரவேற்கத்தக்கது. தற்போது பொம்மசந்திரா வரை, மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. அந்த பாதையை ஓசூர் வரை நீட்டித்தால், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு வசதியாக இருக்கும்.
- மனு சூரஜ், எலக்ட்ரானிக் சிட்டி.
===========
பட்ஜெட்டில், பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளது. விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனுக்கான, வட்டியை தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல அனைத்து வங்கிகளிலும், விவசாயிகள் வாங்கிய கடனுக்கு, வட்டியை தள்ளுபடி செய்தால் அனுகூலமாக இருக்கும். வாக்குறுதி திட்டங்கள் இருப்பதால், விவசாயிகள் கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய முடியாது.
- படகலபுரா நாகேந்திரா
மாநில விவசாயிகள் சங்க தலைவர்
==========
இரவு ஒரு மணி வரை, கடைகளை திறக்க அனுமதி அளித்து, பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்து உள்ளார். நல்ல விஷயம் தான். இரவில் அவசரமாக தேவைப்படும் பொருட்களை, மக்கள் வாங்கி கொள்ளலாம். ஆனால் இரவு நீண்ட நேரம் கடைகள் நடந்தால், குற்றச்சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. இரவில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டால் நல்லது.
- ஹனுமந்த்
மொபைல் கடை உரிமையாளர்
ராஜாஜிநகர்
======
கர்நாடகா வளர்ச்சிக்கு ஏற்பட்ட பட்ஜெட்டை, முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்து உள்ளார். தங்கவயலில் ஒருங்கிணைந்த தொழில் நகரம் அமைப்பதாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம். வீடு இல்லாதவர்களுக்கு மூன்று லட்சம் வீடுகள் கட்டி, இலவசமாக கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கவயல் மக்களும் பயன்பெற வேண்டும். வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்திட கூடாது.
- பிரபு ஆசிர்
ஐ.என்.டி.யு.சி., தலைவர்
தங்கவயல்
=================
அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது பற்றி, எந்த அறிவிப்பும் இல்லை. 'குரூப் டி' எனும் கடைநிலை ஊழியர் பணியிடங்கள், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ளது. பெரிய நகரங்களுக்கு மட்டும், கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி உள்ளனர். கிராம வளர்ச்சி மீது கவனம் செலுத்தவில்லை. யானைகள் அட்டகாசத்தை தடுக்க, நிரந்தர தீர்வு பற்றி எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம்.
- தாஸ்
மாதிகா தண்டோரா அமைப்பு
கோலார் மாவட்ட தலைவர்
========
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு, வீடு தேடி சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று, பட்ஜெட்டில் கூறியதாக கேள்விப்பட்டேன். ரொம்ப நல்ல விஷயம். வயதானவர்களால் நீண்ட வரிசையில் காத்து நின்று, ரேஷன் பொருள் வாங்க முடியவில்லை. வீட்டில் இருந்து ரேஷன் கடை துாரமாக இருந்தால், ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். வீடு தேடி ரேஷன் பொருள் வருவதை எதிர்நோக்கி உள்ளேன்.
- முனியம்மா
உரிகம்பேட்டை
தங்கவயல்
=============
பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளம் தலைமுறையினர் என்று நான்காக பிரித்து, அவர்களுக்காக பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளனர். கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 வயது முதல் 14 வயது உள்ள பெண்களுக்கு, இலவச தடுப்பூசி என்று அறிவித்து உள்ளது வரவேற்கத்தக்கது. சாலையோரம் கடை வைத்திருப்போருக்கு கடன் உதவி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது பாராட்டத்தக்கது.
சூர்யா கணேஷ், மைசூரு.