என்ன சொல்கிறீர்கள்?: எதிர்கட்சியினருக்கு பா.ஜ., கேள்வி
என்ன சொல்கிறீர்கள்?: எதிர்கட்சியினருக்கு பா.ஜ., கேள்வி
UPDATED : ஜூலை 10, 2025 06:17 AM
ADDED : ஜூலை 09, 2025 11:25 PM

பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'ஊடுருவல்காரர்களை வாக்காளர் ஆக்க விரும்புகிறீர்களா?' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டு வருகிறது.
கடைசியாக, 2003ல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்த நிலையில், 22 ஆண்டுகளுக்கு பின் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், 2 கோடிக்கும் அதிகமானோர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.
போராட்டம்
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹார் முழுதும் மஹாபந்தன் கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன.
இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி உள்ளிட்டோர் தலைநகர் பாட்னாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்டம் வாரியாக நடந்த போராட்டங்களில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்-.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
பாட்னாவில் வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் உள்ள பகுதி வரை, எதிர்க்கட்சி தலைவர்கள் திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றனர்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து சட்டசபை வளாகம், தேர்தல் கமிஷன் வளாகம் மற்றும் பேரணி செல்லும் வழிகளில் உள்ள முக்கிய அலுவலகங்கள் முன் தடுப்புகள் போடப்பட்டன. தேர்தல் கமிஷனை முற்றுகையிட முயன்ற தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகளின் செயலை பா.ஜ., வன்மையாக கண்டித்து உள்ளது.
இது குறித்து அக்கட்சி எம்.பி.,யும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று டில்லியில் கூறியதாவது:
போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சியினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு என்று அதிகாரப்பூர்வமான வாக்காளர் பட்டியல் இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெறுவதற்கு யாருக்கெல்லாம் தகுதிகள் இல்லையோ, அவர்களை எல்லாம், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.
இந்தியாவுக்குள் ஊடுருவிய நபர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள், ரோஹிங்யாக்களாக இருக்கலாம் அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் எல்லாம், தவறான வழிகளில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முறைகேடான வழி
இவ்விஷயத்தில், தலைமைத் தேர்தல் கமிஷன் நியாயமான நடவடிக்கை எடுத்தால், எதிர்க்கட்சிகளாகிய உங்களுக்கு என்ன பிரச்னை?
முறைகேடான வழிகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் தோள் மீது ஏறி அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனவா?
ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றனவா?
அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில், ரோஹிங்யாக்களும் இருக்கின்றனர் என்பது, உண்மையா இல்லையா? இது போன்ற, சட்ட விரோத வாக்காளர்களை வைத்து அரசியல் செய்வோம் என எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தால், அதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.
சாதாரண மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. அதைத்தான்,காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. பீஹாரின் 88 சதவீத மக்கள், வெளிமாநிலங்களுக்கு, தொழில் நிமித்தமாக சென்றுள்ளனர். வீடற்றவர்கள், அடையாள அட்டை ஆதாரங்களை வேண்டுமானால் வைத்திருப்பர். அவர்களது முன்னோர்களின் சான்றிதழ் ஆதாரங்களை எப்படி வைத்திருக்க முடியும். இவ்விஷயத்தில் தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவு போடுகிறதா அல்லது ஜனநாயகத்தை படுகொலை செய்கிறதா. இதன்மூலம், தேர்தல் கமிஷன் என்ற அமைப்பே, முற்றிலுமாக அம்பலப்பட்டு நிற்கிறது. ஏழைகளும், ஒடுக்கப்பட்ட மக்களும்தான், எதிர்க்கட்சிகளோடு போராட்டத்தில் கரம் கோர்த்துள்ளனர்.- பிரமோத் திவாரி, ராஜ்யசபா எம்.பி., காங்.,
என் சொந்த தொகுதியிலேயே, நம் அண்டை நாடான வங்கதேசம், மியான்மரில் இருந்து ஏராளமான சட்டவிரோதிகள் தங்கியுள்ளனர். அவர்களை பயன்படுத்தி ஓட்டுகளை திருடும் முயற்சி முன்கெடுக்கப்பட்டுள்ளது. தலித்துகள், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஓட்டுகளை திருடும் முயற்சி இது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தேஜஸ்வி யாதவ்,
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
-நமது டில்லி நிருபர் -

