ADDED : ஏப் 24, 2025 07:12 PM

புதுடில்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், 'ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்' என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஷிம்லா ஒப்பந்தம் வங்கதேச போர் முடிவில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் ஆகும்.வங்கதேச போரில் வெற்றி பெற்ற இந்தியா சார்பில் பிரதமர் இந்திரா, தோல்வியுற்ற பாகிஸ்தான் சார்பில் அதிபர் ஜூல்பிகர் அலி புட்டோ ஆகியோர் கையொப்பம் இட்டனர்.
அனைத்து பிரச்னைகளுக்கும் இரு நாடுகளும் தங்களுக்குள் அமைதியான முறையில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். இதன்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னைகளில் வேறு நாடுகள் தலையிடக்கூடாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தற்போதுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு, இந்த ஒப்பந்தம் மூலமே ஏற்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் 740 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. மலைகள், பள்ளத்தாக்குகள், சிற்றோடைகள், ஆறுகள் இந்த கட்டுப்பாட்டு கோட்டின் மீது அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.