எதிர்கால ஆடைகளில் என்னென்ன பேஷன் வரும்; முன்கூட்டியே கணிக்க சிறப்பு திட்டம் அமல்!
எதிர்கால ஆடைகளில் என்னென்ன பேஷன் வரும்; முன்கூட்டியே கணிக்க சிறப்பு திட்டம் அமல்!
ADDED : செப் 19, 2024 10:18 PM

சென்னை: எதிர்காலத்தில் ஆடை ரகங்களில் என்னென்ன பேஷன் புதிதாக வரும் என்பதை முன்கூட்டியே கணிக்க புதிய செயல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
மனித குலம் தோன்றியது முதல் இந்த மணித்துளி வரை, மனிதன் அணியும் ஆடைகள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. கடந்த நூற்றாண்டில் மனிதன் அணிந்த ஆடைகளுக்கும், இப்போது அணியக்கூடிய ஆடைகளுக்கும் பெரும் வித்தியாசங்கள் உண்டு. இன்றைய இளம் தலைமுறையினர், மிகக்குறைந்த காலங்களிலேயே புதுப்புது பேஷன்களை அறிமுகம் செய்து விடுகின்றனர். அதற்குத் தகுந்தபடி, ஆடை வடிவமைப்பு துறை தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
எனவேதான் எதிர்காலத்தில் வரக்கூடிய பேஷனை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்ப திட்டங்களை வடிவமைக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் திட்டம் உருவாக்கப்பட்டது.
டில்லி என்ஐஎப்டி மற்றும் சென்னை என்ஐஎப்டி ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட எதிர்கால பேஷன் கணிப்பு திட்டம் தான் விஷன்எக்ஸ்டி(VisioNxt). ஆரோக்கியமான உலகளாவிய போட்டியை ஏற்படுத்தவும், இந்திய கலாசாரம் மற்றும் வடிவமைப்பை உலக தரத்திற்கு உயர்த்துவதுமே இதன் நோக்கமாகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் எமோஷனல் நுண்ணறிவு ஆகியவற்றால் பேஷன் துறை பலன்பெறும். இதற்கான ஆதரவை விஷன் எக்ஸ்டி வழங்கும்.
தற்போது, இந்த திட்டத்தை சென்னையை மையமாக வைத்து, டிரெண்டிங்கில் உள்ள திட்டங்களையும், இந்திய பேஷனுக்கான எதிர்கால தேவைகள் மற்றும் சில்லரை வணிகம் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விஷன் எக்ஸ்டியின் திட்டம்
நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், சில்லரை வணிகர்கள்மற்றும் பேஷன் பிராண்டுகளுக்கு தேவையான தகவல்கள் விஷன் எக்ஸ்டி இணையதளத்தில் (www.visionXt.in) ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் உள்ளது. பேஷன் டிரெண்டுகளை கணிக்கும் நாடுகளில் இந்தியாவை உலகளவில் விஷன் எக்ஸ்டி நிலைநிறுத்துவதுடன், வெளிநாட்டு டிரெண்டிங் நிறுவனங்களை சார்ந்து இருப்பதை குறைக்கும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இத்திட்டம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ 22 மொழிகள், 270 தாய்மொழிகள் மற்றும் பழங்குடியினர்கள் உள்ளடக்கிய பரந்த கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
வேலைபார்ப்பவர்களில் 62 சதவீதம் பேர் மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட 54 சதவீத இளைஞர்களிடம், வாழ்க்கை மற்றும் பேஷன் டிரெண்டுகள் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனை விஷன்எக்ஸ்டி பூர்த்தி செய்யும்.
இரண்டு மையங்களில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும், சென்னையில் உள்ள ஆய்வகத்தில் தகவல்கள் சேகரிக்கப்படும். இது டில்லியில் உள்ள ஆய்வகத்தில், தற்போதைக்கு ஏற்ற வகையில் புதுமையான பேஷன் டிரெண்ட், ஸ்டைல் ஆக உருவாக்கப்படும்.
இத்திட்டத்திற்காக தனித்துவமான பயிற்சி உருவாக்கப்பட்டு உள்ளது. ஸ்கேன், கேப்ச்சர், மேப், க்ளஸ்டர், அனாலிசிஸ் மற்றும் பிரசன்ட் ஆகிய 6 தூண்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இதற்கு 'டிரெண்ட்ஓஆர்பி' என பெயர் சூட்படப்பட்டுள்ளது.
'டீப் விஷன்' எனப்படும் மேம்பட்ட ஆழமான கற்றல் முறையைப் பயன்படுத்தி வளர்ந்து வரும் டிரெண்ட்கள் மற்றும் எதிர்கால கணிப்புகளை வரைபடமாக்க விஷன்எக்ஸ்டி ஒரு உயர்தர முறையை பயன்படுத்துகிறது. இதற்காக 54 ஆயிரம் படங்களை அடிப்படையாக வைத்து தகவல்கள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

