தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'நீங்கள் என்ன கடவுளா?' உணவு பாதுகாப்பு துறைக்கு ஐகோர்ட் கேள்வி: உரிமம் ரத்து உத்தரவு உடனடியாக வாபஸ்

'நீங்கள் என்ன கடவுளா?' உணவு பாதுகாப்பு துறைக்கு ஐகோர்ட் கேள்வி: உரிமம் ரத்து உத்தரவு உடனடியாக வாபஸ்

'நீங்கள் என்ன கடவுளா?' உணவு பாதுகாப்பு துறைக்கு ஐகோர்ட் கேள்வி: உரிமம் ரத்து உத்தரவு உடனடியாக வாபஸ்

1


UPDATED : ஆக 29, 2026 09:16 PM

ADDED : ஆக 29, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2026 09:16 PM ADDED : ஆக 29, 2026 09:12 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை:மும்பை கிரிக்கெட் சங்க வளாகத்தில் இயங்கி வந்த ஐந்து உணவகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'நீங்கள் என்ன சர்வ வல்லமை படைத்த கடவுளா?' என, எப்.டி.ஏ., எனப்படும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி கண்டித்தது. இதனால், அரண்டு போன அதிகாரிகள் தற்காலிக ரத்து உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்றனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் பாந்த்ரா - குர்லா பகுதியில் மும்பை கிரிக்கெட் சங்க வளாகம் உள்ளது. இங்கு இயங்கும் ஐந்து உணவகங்களில் சுகாதார குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்திய எப்.டி.ஏ., எனப்படும், மஹாராஷ்டிரா மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள், ஐந்து உணவங்களின் உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்தனர்.

இதை எதிர்த்து, அந்த உணவகங்கள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஐந்து உணவகங்களிலும் மீண்டும் புதிதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், உணவு பாதுகாப்பு விதிகளில் உள்ள அம்சங்களில் 88 சதவீதத்தை ஐந்து உணவகங்களும் பூர்த்தி செய்து இருப்பது தெரியவந்தது.

எனினும் உரிமம் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பெயரில் இருக்க, 'ஷிர்கே இன்பிராஸ்டிரக்சர்' அந்த உணவகங்களை நடத்தி வந்ததை காரணம்காட்டி உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்த நடவடிக்கையை தொடர அதிகாரிகள் முயன்றனர். இந்த சூழலில், பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குஹே மற்றும் நீதிபதி கவுதம் அன்கத் அமர்வில் இம்மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சட்ட ரீதியாக சாத்தியமான விவகாரங்களில் நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறையுடன் நடந்து கொள்ளாமல், அதிகாரிகள் பிடிவாதமாக இருக்கின்றனர். மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் அதிகாரிகளை கண்டித்து, நீதிமன்றத்திற்கு அலுத்து போய்விட்டது.

இனி கடுமையான உத்தரவுகளை பிறப்பிப்பதை தவிர வேறு வழியில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது சிறைக்கு செல்ல வேண்டும்.

கொசுவை கொல்ல கூர்வாள் பயன்படுத்தலாமா? எல்லாவற்றையும் செய்ய நீங்கள் என்ன சர்வ வல்லமை படைத்த கடவுளா?

இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதை தொடர்ந்து ஐந்து உணவகங்களுக்கு எதிராக பிறப்பித்த தற்காலி தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், உணவகங்கள் மீண்டும் இயங்க அனுமதி அளித்தது. ஒப்பந்த விவகாரம் தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி, 'விசாரணைக்கு பிறகே, சட்டப்பூர்வ உத்தரவை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us