மேல்சபையில் நடந்தது என்ன? கவர்னரிடம் ரவி விளக்கம்!
மேல்சபையில் நடந்தது என்ன? கவர்னரிடம் ரவி விளக்கம்!
ADDED : டிச 31, 2024 05:39 AM

பெங்களூரு: கர்நாடக மேல்சபையில் நடந்த சம்பவம், தான் கைது செய்யப்பட்டது உட்பட அனைத்து தகவல்களுடன் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பா.ஜ., - எம்.எல்.சி., ரவி புகார் அளித்தார்.
விடுதலை
பெலகாவியின் சுவர்ண விதான் சவுதாவில், கடந்த 19ம் தேதி, மேல்சபையில் விவாதம் நடந்த போது, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை பற்றி, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி, ஆட்சேபனைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.
லட்சுமி ஹெப்பால்கரின் ஆதரவாளர்கள் கொதித்தெழுந்து, போராட்டம் நடத்தினர். சுவர்ண சவுதாவுக்குள் நுழைந்து, ரவியை தாக்க முயன்றனர். அது மட்டுமின்றி, ரவியை கைது செய்த போலீசார், அன்றிரவு முழுதும் வாகனத்தில் வைத்து சுற்றினர். மறுநாள் நீதிமன்ற உத்தரவுப்படி, அவரை விடுதலை செய்தனர்.
புகார் மனு
இதற்கிடையே, 'ரவியை என்கவுன்டர் செய்யும் நோக்கில், அவரை ஆள் நடமாட்டம் இல்லாத, கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்றனர். ஊடகத்தினர் பின் தொடர்ந்ததால், என்கவுன்டர் செய்ய முடியவில்லை. ஊடகத்தினரால் ரவி உயிர் பிழைத்தார்' என, பா.ஜ.,வினர் குற்றம்சாட்டினர்; போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உட்பட, பா.ஜ., தலைவர்களுடன் நேற்று மதியம் ராஜ்பவனுக்கு சென்ற ரவி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து எட்டு பக்கங்கள் கொண்ட புகார் மனு அளித்தார்.
இதில் டிசம்பர் 19ம் தேதி இரவு என்னென்ன நடந்தது என்பதை விவரித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
சி.ஐ.டி.,
பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் யடா மார்ட்டின், எஸ்.பி., குளேத் உட்பட மற்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தை ஜனாதிபதி, மத்திய உள்துறை கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
துணை முதல்வர் சிவகுமாரின் உத்தரவுபடி, போலீசார் என்னிடம் கூலிப்படை கொலையாளிகள் போன்று நடந்து கொண்டனர். ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று, என் கவுன்டர் செய்ய சதி செய்தனர். போலீசார் சுவர்ண விதான் சவுதாவுக்குள் நுழைந்து, என்னை கைது செய்தனர். இது சட்ட விரோதம். என் உரிமை மீறப்பட்டுள்ளது.
அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் ஆதரவாளர்கள், என்னை கொலை செய்வதாக மிரட்டினர். சட்டசபை எல்லைக்குள் நடந்த சம்பவத்தை பற்றி, விசாரணை நடத்தும் அதிகாரம், சி.ஐ.டி.,க்கு இல்லை.
சம்பவம் நடந்த இடம் சி.ஐ.டி., எல்லைக்குள் வராது. என்னை கைது செய்தது சட்டவிரோதம் என, உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்தது. என் மீது நடந்த அடக்குமுறை குறித்து, டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,யிடம் விளக்கம் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.