மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவதில் கவர்னருக்கு உள்ள அதிகாரம் என்ன? உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி
மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவதில் கவர்னருக்கு உள்ள அதிகாரம் என்ன? உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி
ADDED : பிப் 08, 2025 12:20 AM
புதுடில்லி:'கவர்னர், ஒரு மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்து விட்டு, பின்பு அதை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
'சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுக்கிறார்' எனக்கூறி, அவருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பரிதிவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மூன்றாவது நாளாக நடந்தது.
அவசியம் இல்லை
அப்போது, மாநில பல்கலைகளுக்கான துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'கவர்னர் இந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு, 2023ல் அனுப்பி விட்டார். அது மட்டுமின்றி, தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
'அதற்கு பின், ஜனாதிபதிக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஏதேனும் தகவல் பரிமாற்றம் இருந்ததா? இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் ஜனாதிபதியிடம் உள்ளன. அதன் மீது அவர் எப்போது முடிவெடுப்பார்?' என்று, கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த, கவர்னர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, “இரண்டு மாதங்கள் தான் ஜனாதிபதியிடம் மசோதாக்கள் இருந்தன,” என்று கூறியதுடன், அது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களை தேதி வாரியாக நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் வாதிட்டதாவது:
மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன் என்பதற்கான விளக்கங்களையும், கவர்னர் தெரிவித்திருக்கிறார். அவை, மிகப்பெரிய கட்டுரையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; தெளிவான மொழியில் இருந்தாலே போதும்.
துணைவேந்தர்கள் நியமன மசோதாவை பொறுத்தவரை, குறைந்து வரும் கல்வித்தரங்கள் குறித்த கவலைகளை எழுப்பியே, கவர்னர் முடிவெடுத்தார்.
கவர்னர் தனக்கான அதிகாரத்தை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது; அரசியல் சாசனப்பிரிவு 200ன் கீழ் கவர்னர், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படியே செயல்பட்டுள்ளார். அந்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவது கவர்னரின் கடமை.
இரண்டாவது வாய்ப்பு
இந்த வழக்கை பொறுத்தவரை, கவர்னரின் அதிகாரங்களை மிகவும் குறைவாக நினைத்து இருக்கின்றனர் என்பது தான் காரணம். இந்த மசோதா முறையானதாக இல்லை என்பதை அரசியலமைப்புக்கு உட்பட்டு கவர்னர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'அரசியல் சாசனப்பிரிவு, 200ன் படி, கவர்னருக்கு இருக்கும் இரண்டாவது வாய்ப்பு மசோதாவை நிறுத்தி வைப்பது.
அப்படி நிறுத்தி வைத்துவிட்டு, பின், அவரால் அதை ஜனாதிபதிக்கு அனுப்ப முடியுமா? அதற்கு நேரடியாகவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கலாமே; அப்படி செய்திருந்தால் அதோடு அந்த விஷயம் முடிந்திருக்குமே?' என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த கவர்னர் தரப்பு, 'மசோதா முரண்பாடு கொண்டதாக இருந்தால், அவ்வாறு திருப்பி அனுப்ப வேண்டியதில்லை.
'மசோதாவில் சரி செய்யக்கூடிய தவறுகள் இருந்தால் மட்டும் தான் திருப்பி அனுப்ப வேண்டும்' என, வாதிட்டது.
அப்போது மறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'ஜனாதிபதிக்கு, கவர்னர் அனுப்பும் மசோதாக்களை கவர்னருக்கே திருப்பி அனுப்பி, அதை அரசுக்கு திருப்பி அனுப்ப அறிவுறுத்தல் கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது தானே?' என கேட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்றைய வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, விசாரணையை வரும் 10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர், அன்று, கவர்னர் தரப்பு வாதங்களை நிறைவு செய்ததும், தமிழக அரசு தரப்பு அதற்கான பதில் வாதங்களை முன்வைக்க வேண்டும்.
வரும் 10ம் தேதியே வழக்கின் விசாரணையை முழுமையாக நிறைவு செய்து விடலாம் என, நீதிபதிகள் தெரிவித்தனர்.